வெளிமாநில தொழிலாளர்களை மீண்டும் தாராளமாக அழைத்து வரலாம்: தொழில் கூட்டமைப்பினருக்கு முதல்-அமைச்சர் அனுமதி

வெளிமாநில தொழிலாளர்களை மீண்டும் தாராளமாக தமிழகத்துக்கு அழைத்து வரலாம் என்று தொழில் கூட்டமைப்பினருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி வழங்கி உள்ளார்.
வெளிமாநில தொழிலாளர்களை மீண்டும் தாராளமாக அழைத்து வரலாம்: தொழில் கூட்டமைப்பினருக்கு முதல்-அமைச்சர் அனுமதி
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், குறு- சிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில், அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ள, தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் ஏற்படுகின்ற சிரமங்களைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். குறு, சிறு தொழில்கள் நடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து கவனத்தில் கொள்ளப்படும்.

இ-பாஸ் வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாதவாறு தெளிவான உத்தரவை அரசு வழங்கியுள்ளது. தொழிற்சாலைகளில் பணிபுரிகின்ற அனைவருடைய பெயரையும், முகவரியையும் எழுதிக் கொடுத்தால் உடனடியாக அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அடையாள அட்டை கொடுப்பார்கள், அதை காண்பித்து நீங்கள் தொழிற்சாலைகளுக்கு வரலாம். மாதம் ஒருமுறை அதை புதுப்பித்தால் போதும்.

சிறு தொழில் புரிபவர்களுக்கும் அதேபோலத்தான். இங்குள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீண்டும் தமிழகத்தில் பணியாற்ற விரும்பினால் அவர்களை தாராளமாக அழைத்து வரலாம். அவர்கள் குறித்த விவரங்களை அளித்தால், மாவட்ட ஆட்சித்தலைவர் இ-பாஸ் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வார். மேலும், அவர்களுக்கு கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனை செய்து, தொற்று என்றால், அரசால் சிகிச்சை அளிக்கப்படும். தொற்று பாதிப்பு இல்லை என்றால், நிறுவனத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு பணி வழங்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அவர், மதுரை வடபழஞ்சியில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான எல்காட் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு கொரோனா சிகிச்சைக்காக உருவாக்கப்பட்ட ஆஸ்பத்திரியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அங்கு 900 படுக்கைகள் வசதியுடன், ஆக்சிஜன் சிலிண்டர், வென்டிலேட்டர்கள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளது. அவற்றை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com