கீழ்வேளூர் அட்சயலிங்கசாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.50 லட்சம் நிலம் மீட்பு

கீழ்வேளூர் அட்சயலிங்கசாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது. அப்போது ரைஸ்மில் கட்டிடம் இடிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கீழ்வேளூர் அட்சயலிங்கசாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.50 லட்சம் நிலம் மீட்பு
Published on

சிக்கல்,

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அட்சயலிங்கசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அஞ்சுவட்டத்தம்மன் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தின் மேற்கு பகுதியில் கோவிலுக்கு சொந்தமான 8 சென்ட் (3,706 சதுர அடி) இடம் நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வடக்கு வீதியில் உள்ளது. இந்த இடத்தில் கீழ்வேளூரை சேர்ந்த ஒருவர் கடந்த 1977-ம் ஆண்டு முதல் ரைஸ் மில் நடத்தி வருகிறார். ரைஸ்மில்லை ஒட்டி இரும்பு கடையும் உள்ளது. இந்த இடத்துக்கான வாடகையை 1980-ம் ஆண்டு முதல் கோவிலுக்கு செலுத்தவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு அறநிலையத்துறையினர், அஞ்சு வட்டத்தம்மன் பள்ளியை விரிவாக்கம் செய்ய வேண்டி இருப்பதாக கூறி இடத்தை காலிசெய்ய வேண்டும் என ரைஸ்மில் நடத்தி வந்த நபருக்கு நோட்டீஸ் அனுப்பினர். இதை எதிர்த்து அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தான் முடிவு செய்வார் என கூறியது.

அதன்படி கடந்த மார்ச் மாதம் அறநிலையத்துறை ஆணையர் இடத்தை காலி செய்யும்படி உத்தரவிட்டார். இதுதொடர்பாக உரிய நாட்டீஸ் அனுப்பியும் இடத்தை அந்த நபர் காலி செய்யவில்லை. இந்த நிலையில் நேற்று காலை நாகை வருவாய் கோட்டாட்சியர் மணிவேலன் தலைமையில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, நாகை டவுன் துணை போலீஸ் துணை சூப்பிரண்டு சுப்பிரமணியன், தாசில்தார் மாரிமுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், கோவில் நிர்வாக அதிகாரி சீனிவாசன் மற்றும் அறநிலையத்துறை, வருவாய்துறை ஊழியர்கள் உள்ளிட்டோர் பொக்லின் எந்திரம் மூலம் ரைஸ்மில் மற்றும் இரும்புக்கடை கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தினர்.

இதையடுத்து அங்கு இரும்பு வேலி அமைத்து, அட்சயலிங்கசாமி கோவலுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

முன்னதாக ரைஸ்மில் மற்றும் இரும்பு கடையில் இருந்த பொருட்களை சம்பந்தப்பட்டவர்கள் எடுத்து சென்றனர். தற்போது மீட்கப்பட்டுள்ள கோவிலுக்கு சொந்தமான நிலத்தின் மதிப்பு ரூ.50 லட்சம் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

ரைஸ்மில் மற்றும் இரும்பு கடை இடிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com