

கொடைக்கானல்:
கொடைக்கானல் பகுதியில் கொரோனா நோயாளிகளுக்கு போதிய ஆக்சிஜன் சிலிண்டர்கள் வசதி கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனை நிர்வாகம் தங்களுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கும்படி செஞ்சிலுவை சங்கத்திற்கு கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து செஞ்சிலுவை சங்கம் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பில் கொடைக்கானலில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 16 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிக்கு 8 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு செஞ்சிலுவை சங்க கிளை தலைவரும், முன்னாள் நகரசபை தலைவருமான டாக்டர் கே.சி.ஏ.குரியன் ஆபிரகாம் தலைமை தாங்கினார்.
அரசு தலைமை மருத்துவர் பொன்ரதி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ. சிவக்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் ஆகியோர் கலந்துகொண்டு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கி பேசினர்.
நிகழ்ச்சியில் செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் தாவுது, நாட்ராயன், அப்பாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.