ப.சிதம்பரம் கைதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ப.சிதம்பரம் கைதை கண்டித்து கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ப.சிதம்பரம் கைதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், காங்கிரஸ் கட்சி மற்றும் ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கம் சார்பில், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை கைது செய்து திகார் சிறையில் அடைத்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர் ஏகம்பவாணன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் ஜேசுதுரைராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அக.கிருஷ்ணமூர்த்தி, நாராயணமூர்த்தி, சூர்யகணேஷ், எஸ்.சி. பிரிவு மாநில அமைப்பாளர் ஆறுமுகசுப்பிரமணி, ராகுல் பேரவை மாநில தலைவர் ராமச்சந்திரன், மேற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சாதிக், கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் நகர தலைவர் ரகமத்துல்லா வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஓசூர் கோபிநாத் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசுகையில், மத்திய அரசு பொய்வழக்கு போட்டு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை கைது செய்து, பழிவாங்கும் நோக்கத்தோடு சிறையில் அடைத்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்துகொள்வதோடு, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டார தலைவர்கள் கோபால், ரவிச்சந்திரன், அன்பு மற்றும் நிர்வாகிகள் அமாசி ராஜேந்திரன், அன்சர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ராகுல் பேரவை மாவட்ட தலைவர் விஜயராஜ் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com