

ஓசூர்,
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு கருமாரம்பாளையம் பகுதியை சேர்ந்த சின்னசாமியின் மகன் சிவமூர்த்தி (வயது 47). இவர் அந்த பகுதியில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். இவருடைய மனைவி துர்கா வைஷ்ணவி. இவர்களுக்கு 3 வயதில் மகள், 1 வயதில் மகன் உள்ளனர். சிவமூர்த்தி முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மனைவியின் தங்கை பத்மினியின் மருமகன் ஆவார்.
இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி காலை 11 மணிக்கு சிவமூர்த்தி கோவைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு தனது சொகுசு காரில் புறப்பட்டு சென்றார். அதன்பிறகு இரவு அவர் வீடு திரும்பவில்லை. அவருடைய 3 செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மேலும் சிவமூர்த்தி பற்றிய எந்த விவரமும் அவருடைய வீட்டினருக்கு தெரியவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னசாமி நேற்று முன்தினம் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தொழில் அதிபர் சிவமூர்த்தி மாயமானதாக கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் அவருடைய செல்போன் எண்கள் மற்றும் மாயமான காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் துப்பு துலக்கி வந்தனர். மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடந்தது.
சிவமூர்த்தி காரின் பதிவு எண்ணை தமிழகம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது நேற்று முன்தினம் இரவு அந்த கார் கிருஷ்ணகிரி மற்றும் வாணியம்பாடி சோதனை சாவடிகள் வழியாக கடந்து சென்றது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து வேலூர் மாவட்டம் ஆம்பூர் போலீசாருக்கு திருப்பூர் போலீசார் தகவல் தெரிவித்து உஷார் படுத்தினார்கள்.
ஆம்பூர் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வெங்கிளி என்ற இடத்தில் நள்ளிரவு 12.30 மணியளவில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த சிவமூர்த்தியின் காரை போலீசார் மடக்கி பிடித்தனர். காரில் இருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கோவை மாவட்டம் காரமடை அருகே தேக்கம்பட்டி சேத்துமடையை சேர்ந்த கண்மணியின் மகன் விமல்(35), செல்வராஜின் மகன் கவுதமன்(22), சகாதேவன் மகன் மணிபாரதி(22) என்பது தெரியவந்தது.
3 பேரையும் ஆம்பூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ரூ.50 லட்சம் கேட்டு தொழில் அதிபர் சிவமூர்த்தியை கடத்திச்சென்று கழுத்தை நெரித்துக்கொலை செய்து விட்டு பின்னர் பிணத்தை காரில் 2 நாட்களாக வைத்து சுற்றிவிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையில் கல்லை கட்டி வீசிச்சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் நேற்று கெலவரப்பள்ளி அணைக்கு அழைத்துச்சென்றனர். அவர்கள் சிவமூர்த்தியின் உடலை வீசிய இடத்தை அடையாளம் காட்டினார்கள். பின்னர் போலீசார் அணையில் இருந்து சிவமூர்த்தியின் உடலை நேற்று மீட்டனர். சிவமூர்த்தியின் கை, கால் மற்றும் முகத்தில், அட்டைப்பெட்டிகள் ஒட்ட பயன்படுத்தும் டேப்பால் சுற்றப்பட்டு இருந்தது. உடலோடு மைல் கல்லும் சேர்த்து கட்டப்பட்டு இருந்தது. பிணத்தை கைப்பற்றிய போலீசார் ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவத்தில் சேத்துமடையை சேர்ந்த மூர்த்தி(35) என்பவரும் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து திருப்பூர் போலீசார் காரமடையில் வைத்து மூர்த்தியை நேற்று பிடித்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விமல், கவுதமன், மணிபாரதி, மூர்த்தி ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் திருப்பூர், ஓசூர் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.