தூத்துக்குடியில் கரைவலையில் அதிகமாக பிடிபட்ட பேச்சாளை மீன்கள்

தூத்துக்குடியில் கரைவலையில் நேற்று அதிகளவில் பேச்சாளை மீன்கள் பிடிபட்டன.
தூத்துக்குடியில் கரைவலையில் அதிகமாக பிடிபட்ட பேச்சாளை மீன்கள்
Published on

தூத்துக்குடி,


தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வகையான மீன்பிடித்தல் முறைகள் நடைமுறையில் உள்ளன. இதில் நாட்டுப்படகு, விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலில் வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தல், தூண்டில் மூலம் மீன்பிடித்தல், கரைவலை மூலம் மீன்பிடித்தல் உள்ளிட்ட முறைகளில் மீன்பிடிக்கப்படுகிறது. தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரை பகுதியில் உள்ள மீனவர்கள் கரைவலையை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர்.

இந்த மீன்பிடித்தலில் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் சேர்ந்து குடும்பத்தோடு மீன்பிடிக்கின்றனர். இந்த முறையில் சிறிய படகில் சிறிது தூரம் கடலுக்குள் சென்று வலையை விரிப்பார்கள். வலையின் இருமுனையும் கரையில் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்வார்கள். சிறிது நேரத்துக்கு பிறகு வலையின் இருமுனைகளையும் பிடித்து கரையில் இருந்தபடி வலையை இழுப்பார்கள். அப்போது வலையில் சிக்கி உள்ள மீன்கள் மட்டுமின்றி, விரிக்கப்பட்ட வலைக்கு நடுவே உள்ள மீன்களும் கரைக்கு வந்து சேர்ந்து விடும். இந்த வலையை இழுப்பதற்காக மீனவர்கள் அம்பா என்னும் ஒரு வகை பாடலை பாடுவதும் வழக்கம். பாடலை பாடிக்கொண்டே வலையை இழுப்பார்கள்.


நேற்று மீனவர்கள் வழக்கம் போல் கரைவலை மூலம் மீன்பிடித்தனர். அப்போது வலையில் ஏராளமான பேச்சாளை, கெழுத்தி, சிறிய பாறை மீன்கள் பிடிபட்டன. இதனை தரம் வாரியாக பிரித்து விற்பனை செய்தனர். ஒரு கிலோ பேச்சாளை மீன் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com