பாகூர் பகுதியில் புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

பாகூர் பகுதியில் புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
பாகூர் பகுதியில் புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
Published on

புதுச்சேரி,

சட்டசபையில் கேள்வி நேரத்தில் எம்.எல்.ஏ.க்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு முதல்-அமைச்சர், அமைச்சர்கள் அளித்த பதில்களும் வருமாறு:-

தீப்பாய்ந்தான் (காங்): நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை கிராமப்புற மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் ஊசுடு தொகுதி பத்துக்கண்ணு பகுதியில் அரசு இலவச பயிற்சி மையம் தொடங்க அரசு முன்வருமா?

அமைச்சர் கமலக்கண்ணன்: 40 மாணவர்களுக்கு மேல் சேர்ந்தால் பரிசீலிக்கப்படும்.

வையாபுரி மணிகண்டன் (அ.தி.மு.க.): சோலைநகரில் இயங்கி வரும் இளைஞர் விடுதியின் சுற்றுச்சுவர் மற்றும் உள்கட்டமைப்புகள் இடிந்து விழுந்துள்ளதை அரசு அறியுமா?

அமைச்சர் கமலக்கண்ணன்: சுற்றுச்சுவர் கட்ட நிதி ஒப்புதல் பெறப்பட்டபின் ஆரம்பிக்கப்படும். கட்டிடத்தின் பழுதடைந்த சில பகுதிகள் விடுதியின் நிதி கொண்டு சரிசெய்யப்பட்டு வருகிறது. இப்பணி விரைவில் முடிக்கப்படும்.

விஜயவேணி (காங்): மடுகரை, கரையாம்புத்தூர் மற்றும் நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்புக்கடி, வெறிநாய்க்கடி மருந்துகள் இல்லை என்பதை அரசு அறியுமா?

நாராயணசாமி: உயிர் காக்கும் மருந்துகளான பாம்புக்கடி, வெறிநாய்க்கடிக்கான மருந்துகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கையிருப்பில் உள்ளது. அது காலியாகும்பட்சத்தில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தனவேலு (காங்): குருவிநத்தம், கொரவள்ளிமேடு மற்றும் மணப்பட்டு ஆகிய கிராமங்களில் போடப்பட்ட ஆழ்குழாய் கிணற்றை பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், இருளன்சந்தை மதுரா, பாகூர் ஏரிக்கரை, குருவிநத்தம் பெரியார் நகர், சோரியாங்குப்பம், ஆராய்ச்சிக்குப்பம், கொமந்தான்மேடு, கன்னியகோவில் ஆகிய கிராமங்களில் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய அரசு முன்வருமா?

அமைச்சர் நமச்சிவாயம்: குருவிநத்தத்தில் போடப்பட்ட ஆழ்குழாய் கிணறு கொம்யூன் வசம் ஒப்படைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. இருளன்சந்தை மதுரா, பாகூர் ஏரிக்கரை, குருவிநத்தம் பெரியார்நகர், சோரியாங்குப்பம், ஆராய்ச்சிக்குப்பம், கொமந்தான்மேடு, கன்னிக்கோவில் ஆகிய கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டு தேவைப்படின் புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்படும்.

ஜெயமூர்த்தி-சிவா: அருந்ததியர் (சக்கிலியர்) இன மக்களுக்கு தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென கொண்டுவரப்பட்ட தனிநபர் தீர்மானம் அரசு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதன் தற்போதைய நிலை என்ன? சாதி சான்றிதழில் சக்கிலியர் என்ற பெயர் வழங்கப்பட்டு வருவதை அருந்தியர் என்று பெயர் மாற்றம் செய்ய அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?

அமைச்சர் கந்தசாமி: சட்டசபை தீர்மானம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் மத்திய அரசின் தேசிய அட்டவணை இன ஆணையத்துக்கு விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அமைச்சரவையின் ஒப்புதல் பெற்றபின் அருந்ததியர் என்ற பெயரில் சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com