

பாகூர்,
பாகூர் தாலுகா அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தாசில்தார் கார்த்தி கேயன் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். விழாவில் அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆணையர் சவுந்தரராஜன், போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ் ஆகியோர் தேசியக்கொடி ஏற்றினர். பாகூர் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேச தலைவர்கள் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கர், நிர்வாகிகள் திருநாவுக்கரசு, பாஸ்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்தில் ஆணையர் கலியமூர்த்தி தேசிய கொடியை ஏற்றி, அங்குள்ள மகாத்மா காந்தி உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் உதவிப்பொறியாளர் யுவராஜ், மேலாளர் ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர். அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அச்சுதன் கொடி ஏற்றி, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
திருபுவனையை அடுத்த மகதடிப்பட்டில் மூத்த குடிமக்கள் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்குள்ள காமராஜர் நினைவு தூண் பகுதியில் புதுச்சேரி கலால் துறை துணை தாசில்தார் அய்யனார் தேசிய கொடி ஏற்றினார். இதில் மூத்த குடிமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
வில்லியனூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் துணை கலெக்டர் தஸ்வத் சவுரவ் தலைமயிலும் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மேத்யூ தலைமையிலும், கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆணையர் ஆறுமுகம் தலைமையிலும், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆணையர் மனோகர் தலைமையிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது.