மணப்பாறை அருகே மாம்பூண்டி நல்லாண்டவர் கோவிலில் பால்குட விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

மணப்பாறை அருகே உள்ள மாம்பூண்டி நல்லாண்டவர் கோவிலில் நடைபெற்ற பால்குட விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மணப்பாறை அருகே மாம்பூண்டி நல்லாண்டவர் கோவிலில் பால்குட விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
Published on

மணப்பாறை,

மணப்பாறையை அடுத்த ஆண்டவர்கோவில் என்ற இடத்தில் மாம்பூண்டி நல்லாண்டவர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி முதல் நாள் பால்குட விழாவும், அதைத்தொடர்ந்து ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு மற்றும் சாமி உள்வீதியுலா நடைபெறும்.

இதேபோல் இந்த ஆண்டும் பால்குட நிகழ்வின் தொடக்கமாக கடந்த 7-ந் தேதி காலை மாம்பூண்டி நல்லாண்டவர் கோவிலில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஆடி முதல் நாளான நேற்று பால்குட விழா நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, இணை ஆணையர் சுதர்சனன் ஆகியோர் மேற்பார்வையில் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள வடிவுடைய நாயகி உடனாய அகத்தீசர் கோவிலில் இருந்து சிறப்பு வழிபாடுகளுக்குப்பின் கோவில் ஆய்வாளர் விஜயகுமார், செயல் அலுவலர் பிரபாகர், கோவில் பரம்பரை அறங்காவலரும், ஜமீன்தாருமான முத்து வீரலெக்கையன் மற்றும் சுற்றுப்பட்டி கிராமங்களின் ஊர் முக்கியஸ்தர்கள் முன்செல்ல அதைத்தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்ற கோவிலை வந்தடைந்தனர்.

பின்னர் முத்துக்கண்ணன் குருக்கள் தலைமையில் மாம்பூண்டி நல்லாண்டவருக்கு பாலாபிஷேகமும், அதைத்தொடர்ந்து அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் தொடர்ச்சியாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு வழிபாடு மற்றும் சாமி வீதியுலா வருகிறது. நாளை ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி காலை கணபதி வேள்வியும், அதைத்தொடர்ந்து நல்லாண்டவருக்கு நறுமணப் பொருட்களால் சிறப்பு நீராட்டும், இதேபோல ஏழு கருப்பண்ணசாமிகளுக்கு புனித நீராட்டும் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து மலர்த்தேரில் மாம்பூண்டி நல்லாண்டவர் உள்வீதியுலா வருகிறார். ஆடி 4-ம் வெள்ளிக்கிழமையான அடுத்த மாதம் 9-ந் தேதி குதிரை வாகனத்தில் மாம்பூண்டி நல்லாண்டவரின் வீதியுலா நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com