

போளூர்,
போளூரில் பர்வதராஜகுல மித்திரர்கள் சார்பிலும் வன்னிய சமூகத்தினர் சார்பிலும் மயானக்கொள்ளை விழா நடந்தது. விழாவில் பக்தர்கள் தங்களது விவசாய விளை பொருட்களை வீசி அங்காளம்மனை வணங்கினார்கள்.
2 அலங்கார தேர்களில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வேட்டவலம் சின்னகடைவீதியில் அமைந்திருக்கும் அங்காளம்மன் கோவிலில் மாசி மாத உற்சவம் மயானக் கொள்ளை விழா பர்வதராஜகுல மக்கள் தலைமையில் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மன் வீதி உலா நடைபெற்றது. அம்மன் மாடவீதி வழியாக வலம் வந்தபோது பொதுமக்கள் தங்கள் நிலத்தில் விளைந்த தானியங்கள், காய்கறிகள் மற்றும் வியாபாரிகள் தங்கள் கடையில் விற்கப்படும் பொருட்களையும் அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பர்வதராஜகுலத்தை சேர்ந்தவர்களும், ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர்.
கண்ணமங்கலத்தில் அங்காளம்மன் கோவில் சார்பில் மயானக் கொள்ளை உற்சவ திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 5-ந் தேதி அங்காளம்மனுக்கு காப்பு கட்டி கொடியேற்றுவிழா நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை கரக ஊர்வலமும், இரவில் ஜோதி கரக ஊர்வலமும் நடைபெற்றது. நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்து மாலை 4 மணியளவில் அம்மன் சிம்மவாகனத்தில் ஊர்வலமாக நாகநதிக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மாலை 6 மணியளவில் நாகநதிக்கரையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்து மயானக் கொள்ளை உற்சவ விழா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அம்மனுக்காக கொழுக்கட்டை, சுண்டல், நவதானியங்கள் சூறையிட்டனர். இரவு 9 மணியளவில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) இரவு பட்டிமன்றம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை பொதுமக்கள் சார்பில் விழா குழுவினர் செய்திருந்தனர்.