

தா.பழூர்,
கிராம பஞ்சாயத்தில் பணிபுரியும் ஊராட்சி செய லாளர்களுக்கு, இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியத்தை கருவூலம் மூலமாக வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று தா.பழூர் ஒன்றியத்தை சேர்ந்த 33 ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் பங்கேற்று உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், சந்தானம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத், உதவிபொறியாளர் குமார், பணி மேற்பார்வையாளர் மஞ்சுளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வேலை நிறுத்த போராட்டத்தால் தா.பழூர் ஒன்றியத்திலுள்ள கிராம வளர்ச்சி பணிகள் முடங்கியது.
அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழியர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு வேலை எதுவும் செய்யாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார வளர்ச்சி அதிகாரி பிரபாகரன் முன்னிலை வகித்தார். ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு, இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் கரு வூலம் மூலம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் 28 ஊராட்சி செயலாளர்கள், 40 உள்ளாட்சிதுறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலு வலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பஞ்சாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த போராட்டத்தால் அலுவலகத்தில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. போராட்டத்தில் அரசு ஊழியர் சங்க வட்டார தலைவர் காமராஜ், செயற்குழு உறுப்பினர் வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலர்கள் வேலை நிறுத்தம் செய்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர்.