புதூரில் பண்ணாரி அம்மன் வீதி உலா சப்பரம் முன்பு படுத்து பெண்கள் நேர்த்திக்கடன்

புதூரில் பண்ணாரி அம்மன் வீதி உலா சப்பரம் முன்பு படுத்து பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
புதூரில் பண்ணாரி அம்மன் வீதி உலா சப்பரம் முன்பு படுத்து பெண்கள் நேர்த்திக்கடன்
Published on

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் அருகே உள்ள புதூரில் பண்ணாரி அம்மன் சப்பரம் வீதி உலா நடந்தது. இக்கரைதத்தப்பள்ளியில் சப்பரம் முன்பு படுத்து பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் விழா கடந்த 19-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து பண்ணாரி அம்மன் மற்றும் சருகு மாரியம்மன் வீதி உலா தொடங்கியது. இதற்காக அம்மன்களின் உற்சவ சிலைகள் அலங்கரித்து சப்பரத்தில் வைக்கப்பட்டு சிக்கரசம்பாளையம் சென்று அங்குள்ள மாரியம்மன் கோவிலில் தங்க வைக்கப்பட்டது. பின்னர் நேற்று முன்தினம் சிக்கரசம்பாளையம் கிராமம் முழுவதும் திருவீதி உலா நடந்தது. அதன்பின்னர் அன்று இரவு புதூர் மாரியம்மன் கோவிலுக்கு சென்று அங்கு சப்பரம் தங்க வைக்கப்பட்டது.

நேற்று காலை 8 மணிக்கு புதூர் மாரியம்மனுக்கும், பண்ணாரி மாரியம்மனுக்கும், சருகு மாரியம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்பின்னர் உற்சவ அம்மன்களின் சப்பரம் தாரை தப்பட்டை மங்கள வாத்தியம் முழங்க திருவீதி உலா புறப்பட்டது.

புதூரில் இருந்து இக்கரை தத்தப்பள்ளி காலனியில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவிலுக்கு சப்பரம் எடுத்து செல்லப்பட்டது. அப்போது அந்த பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் தேங்காய், பழம் படைத்து அம்மனை வழிபட்டார்கள். இதைத்தொடர்ந்து சப்பரம் திருவீதி உலா புறப்பட்டது. உடனே அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என சுமார் 200 பேர் நேர்த்திக்கடனுக்காக சப்பரத்தின் முன்பு குப்புற படுத்துக்கொண்டார்கள்.

சப்பரத்தை தூக்கி வந்த பக்தர்களும் பூசாரியும் ஒவ்வொருவரையும் தாண்டி தாண்டி வந்தார்கள். பின்னர் சப்பரம் வெள்ளியம்பாளையம் வந்து திருவீதி உலாவை முடித்துக்கொண்டது. அதைத்தொடர்ந்து அங்கிருந்து கொத்தமங்கலம் வழியாக நேற்று இரவு தொட்டம்பாளையம் வேணுகோபாலசாமி கோவிலை அடைந்தது. அங்கு இரவு தங்க வைக்கப்பட்டது.

இன்று (வெள்ளிக்கிழமை) தொட்டம்பாளையம் வேணுகோபாலசாமி கோவிலில் இருந்து பண்ணாரி அம்மன் சப்பரம் வீதி உலாவாக எடுத்து செல்லப்படுகிறது. வெள்ளியம்பாளையம் புதூர் வழியாக சப்பரம் சுமந்து செல்லப்பட்டு அக்கரை தத்தப்பள்ளி மாரியம்மன் கோவிலை அடைகிறது. அங்கு அன்று இரவு தங்க வைக்கப்படுகிறது. நாளை (சனிக்கிழமை) அக்கரை தத்தப்பள்ளியில் வீதி உலா நடக்கிறது. அங்கிருந்து சப்பரம் சத்தியமங்கலத்தை வந்தடைகிறது. பின்னர் அங்குள்ள தண்டுமாரியம்மன் கோவிலில் சப்பரம் வைக்கப்படுகிறது.

அதன்பின்னர் 25-ந் தேதி சத்தியமங்கலத்தில் திருவீதி உலா நடைபெறுகிறது. பின்னர் வேணுகோபால சாமி கோவிலில் சப்பரம் தங்க வைக்கப்படுகிறது. 26-ந் தேதி ரங்கசமுத்திரம், புதிய எக்ஸ்டென்சன் வீதி வழியாக முத்துமாரியம்மன் கோவிலை அடைகிறது. கோட்டுவீராம்பாளையம் வழியாக 27-ந் தேதி அய்யம்பாளையம் மாரியம்மன் கோவிலை அடைகிறது. அங்கு அன்னதானம் நடக்கிறது.

புதுவடவள்ளி, புதுகுய்யனூர், பசுவபாளையம், புதுபீர்கடவு, பட்டரமங்கலம் வழியாக மீண்டும் சப்பரம் கோவிலை வந்தடைகிறது. அதன் பின்னர் குழிக்கம்பம் சாட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் 1-ந்தேதி வரை நித்தியபடி பூஜை நடக்கிறது. மேலும் இரவு 7 மணிக்கு மேல் தாரை தப்பட்டை முழங்க மலைவாழ் மக்கள் கம்பத்தை சுற்றி களியாட்டம் ஆடும் நிகழ்ச்சி நடக்கிறது.

2-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா 3-ந் தேதி நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

4-ந்தேதி மதியம் 12 மணிக்கு பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து அம்மனை தரிசனம் செய்கிறார்கள். இரவு 10 மணிக்கு கரகாட்டத்துடன், புஷ்ப அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. 5-ந்தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

6-ந்தேதி திருவிளக்கு பூஜையும், இரவு 7 மணிக்கு தங்கரதம் கோவிலை சுற்றி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 9-ந்தேதி மறுபூஜை நடக்கிறது. விழா நாட்களில் பட்டிமன்றம், இன்னிசை கச்சேரி, பரதநாட்டியம், வழக்காடு மன்றம், ஆன்மிக சொற்பொழிவு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com