குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஊராட்சி, ஒன்றியக்குழு தலைவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் - கலெக்டர் உத்தரவு

குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஊராட்சி, ஒன்றியக்குழு தலைவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலெக்டர் உத்தரவிட்டார்.
குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஊராட்சி, ஒன்றியக்குழு தலைவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் - கலெக்டர் உத்தரவு
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். பின்னர் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். அதையடுத்து அனைத்து துறை அதிகாரிகளுக்கும் கலெக்டர் சில உத்தரவுகளை பிறப்பித்தார். அதன் விவரம் வருமாறு:-

குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்களில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்ட வேண்டும். அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவமாணவிகளில் ஒரு பள்ளிக்கு 2 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்க வேண்டும்.

பின்னர் அவர்கள் மூலம் பிற மாணவமாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அத்துடன் மாவட்ட கலெக்டர் பெயரில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தபால் அட்டைகளை மாணவமாணவிகளுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுதவிர, ஊராட்சி மற்றும் ஒன்றியக்குழு தலைவர்களுக்கும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்க வேண்டும்.

பின்னர் அவர்களை ஒன்றிணைத்து ஒரு குழுவை உருவாக்கி மாவட்டம் முழுவதும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும், அவற்றில் இருந்து அவர்களை எப்படி பாதுகாப்பது என்பது குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த குழுவை சேர்ந்தவர்கள் 3 மாதத்துக்கு ஒருமுறை கூட்டம் நடத்தி குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

ஆதரவற்ற குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் வளரும் குழந்தைகளுக்கு பிறப்பு, சாதி உள்ளிட்ட சான்றுகள் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com