

பண்ருட்டி,
பண்ருட்டி பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று குறிஞ்சிப்பாடிக்கு புறப்பட்டது. பஸ்சை ஏ.புதூரை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் ஓட்டினார். கண்டக்டராக மணிகண்டன் இருந்தார். பண்ருட்டி லிங்க்ரோட்டில் சென்றபோது, பஸ்சின் கடைசி சீட்டின் அடிப்பகுதியில் இருந்த மர்ம பொருள் சத்தத்துடன் வெடித்தது. இதனால் டிரைவர், சாலையோரத்தில் பஸ்சை நிறுத்தினார். உடனடியாக பயணிகள் அனைவரும் அலறிஅடித்துக்கொண்டு பஸ்சில் இருந்து கீழே இறங்கி ஓடினர். கடைசி சீட்டில் இருந்த ஒருவர் மட்டும் காலில் அடிபட்ட நிலையில் வலியால் துடித்தார். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இதனிடையே இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் விரைந்து வந்து பஸ்சை பார்வையிட்டனர். அப்போது அந்த பஸ்சின் கடைசி சீட்டின் அடிப்பகுதியில் ஒரு சாக்குப்பை கிழிந்த நிலையில் இருந்தது. அதை எடுத்து பார்த்தபோது, வெடி மருந்து வாசம் வீசியது.
இதனை தொடர்ந்து பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சென்று, காயமடைந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த பாசு(வயது 65) என்பதும், நரிக்குறவர் என்பதும் தெரியவந்தது. பாசு தினமும் வேட்டையாட செல்வது வழக்கம். இதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதிபெற்று நாட்டுத்துப்பாக்கி பயன்படுத்தி வந்துள்ளார். இதற்காக அவர் நேற்று, விழுப்புரத்துக்கு சென்று வெடி மருந்து வாங்கிவிட்டு, பண்ருட்டிக்கு வந்தார். பின்னர் பஸ்சில் ஏறி, வெடிமருந்து இருந்த சாக்குப்பையை சீட்டின் அடிப்பகுதியில் வைத்திருந்தார். பண்ருட்டி லிங்க்ரோட்டில் உள்ள வேகத்தடையில் பஸ் ஏறி, இறங்கியபோது ஏற்பட்ட அழுத்தத்தால் வெடிமருந்து வெடித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.