பண்ருட்டியில் பரபரப்பு: 7 பஸ்களின் கண்ணாடி உடைப்பு - மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பண்ருட்டியில் 7 பஸ்களின் கண்ணாடியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
பண்ருட்டியில் பரபரப்பு: 7 பஸ்களின் கண்ணாடி உடைப்பு - மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

பண்ருட்டி,

பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூரில் இருந்து பண்ருட்டிக்கு அரசு டவுன் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை புறப்பட்டது. அந்த பஸ், பனிக்கன்குப்பம் அண்ணா பொறியியல் கல்லூரி அருகே வந்த போது, எதிரே ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் திடீரென இரும்பு குண்டு ஒன்றை பஸ்சின் மீது வீசினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். இந்த சம்பவத்தில் சாமர்த்தியமாக டிரைவர் பஸ்சை நிறுத்தினார். இதனால் பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

இதே போல் அடுத்தடுத்து வந்த கும்பகோணம்-பண்ருட்டி அரசு விரைவு பஸ், தஞ்சை-சென்னை மற்றும் கும்பகோணம் -சென்னை நோக்கி வந்த அரசு பஸ்கள் மீதும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இரும்பு குண்டுகளை வீசினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது.

மேலும் அவர்கள் அடுத்தடுத்து வந்த 3 தனியார் பஸ்கள், கார், மினிலாரி மீதும் இரும்பு குண்டுகளை வீசினர். இதில் பஸ்கள், கார், மினிலாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இந்த சம்பவத்தில் ஒரு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் காயமடைந்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் மொத்தம் 7 பஸ்கள் மீதும், ஒரு கார், ஒரு மினிலாரி மீதும் மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மர்மநபர்களின் இந்த தாக்குதலின் போது, வாகனங்களின் டிரைவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டதால் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை.

இது பற்றி தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். மேலும் பஸ்களின் டிரைவர்கள் காடாம்புலியூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com