பெற்றோர் எதிர்ப்பு, ரெயில் முன் பாய்ந்து கேரள காதல் ஜோடி தற்கொலை

பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கேரளாவை சேர்ந்த காதல் ஜோடி கோவையில் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது. அவர்களிடம் இருந்து உருக்கமான கடிதம் சிக்கியது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெற்றோர் எதிர்ப்பு, ரெயில் முன் பாய்ந்து கேரள காதல் ஜோடி தற்கொலை
Published on

கோவை,

கோவையில் இருந்து போத்தனூருக்கு செல்லும் தண்டவாளத்தில் ஜி.எம்.நகர் அருகே ஒரு வாலிபர், மற்றும் இளம்பெண் உடல் கிடப்பதாக கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு பிணமாக கிடந்தவர்களின் உடல் துப்பட்டாவால் கட்டப்பட்டு இருந்தது. இதனால் அவர்கள் 2 பேரும் ஒன்றாக சேர்ந்து ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் பேண்ட் பாக்கெட்டில் போலீசார் சோதனை செய்தபோது கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னைக்கு செல்வதற்கான முன்பதிவில்லா டிக்கெட் இருந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தபோது, தண்டவாளத்தின் அருகில் 2 பைகள் கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றி சோதனை செய்தனர்.

அதற்குள் 2 அடையாள அட்டைகள் மற்றும் கடிதம் ஆகியவை இருந்தன. அதை வைத்து விசாரித்த போது, தற்கொலை செய்த வாலிபர் கேரள மாநிலம் கொல்லத்தை அடுத்த அடூர் அருகே உள்ள எடகட்டும் விளா பகுதியை சேர்ந்த அமல் பி.குமார் (வயது 19) என்பதும், அந்த இளம்பெண் அடூர் அருகே உள்ள அம்மாகன்கராவை சேர்ந்த சூர்யா நாயர் (18) என்பதும் தெரியவந்தது.

காதல்ஜோடி தற்கொலை செய்து கொண்டதை அறிந்த அவர்களின் பெற்றோர் கோவைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பிணமாக கிடந்த காதல்ஜோடியின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட இருவரும் அடூரில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி பி.காம் முதலாம் ஆண்டு சேர்ந்து உள்ளனர். அடுத்த சில நாட்களில் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது. இதை அறிந்த அவர்களின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் சூர்யா நாயரை கல்லூரிக்கு செல்லக்கூடாது என்று அவருடைய பெற்றோர் எச்சரித்துள்ளனர். இதனால் தங்களை பிரித்து விடுவார்களோ என்ற பயத்தில் காதல் ஜோடி வீட்டைவிட்டு வெளியேறி சென்னை செல்ல முடிவு செய்தனர்.

இதனால் நேற்று முன்தினம் மதியம் இருவரும் கொல்லம் ரெயில் நிலையம் சென்றனர். அங்கிருந்து சென்னை செல்ல முன்பதிவில்லா டிக்கெட் வாங்கிவிட்டு ரெயிலில் ஏறினார்கள். அந்த ரெயில் நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவை வந்தது. உடனே அவர்கள் இருவரும் கோவை ரெயில் நிலையத்தில் இறங்கினார்கள். பின்னர் அங்குள்ள இருக்கையில் இருவரும் அமர்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.

வெளியூர் சென்றால் தேடி கண்டுபிடித்து பெற்றோர் நம்மை பிரித்து விடுவார்கள். இதனால் சேர்ந்து வாழ முடியாது. எனவே ஒன்றாக சேர்ந்து சாவது என்று கேரள காதல் ஜோடி முடிவு செய்தது. பின்னர் தண்டவாளம் ஓரத்தில் இருவரும் கைகோர்த்து பேசியபடி போத்தனூர் நோக்கி 4 கி.மீட்டர் தூரம் நடந்து சென்றனர்.

அப்போது தண்டவாளத்தில் ஒரு ரெயில் வேகமாக வந்தது. உடனே அவர்கள் 2 பேரும் தங்களின் உடல்களை துப்பட்டாவால் இறுக கட்டிக்கொண்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் கைப்பற்றிய கடிதத்தில், மலையாளத்தில் பேச்சு வழக்கு ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது. அதில், எனக்கு உன்னை அதிகமாக பிடிக்கும். நீ இல்லாமல் நான் இல்லை. நாம் சேர பெற்றோர் விடமாட்டார்கள். உன்னை பிரிந்து என்னால் வாழவும் முடியாது. இதனால் நான் செல்கிறேன். உனக்கு விருப்பம் இருந்தால் என்னுடன் வா, உன்னை நான் வற்புறுத்த மாட்டேன் என்று உருக்கமாக எழுதப்பட்டு இருந்தது.

இந்த கடிதத்தை எழுதியது அமல் பி.குமாரா, அல்லது சூர்யா நாயரா என்பது தெரியவில்லை. தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதியது இல்லை என்றும், ஊரில் இருந்து புறப்படுவதற்கு முன்பு அவர்கள் இருவரில் ஒருவர் எழுதி இருக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் பாலக்காட்டில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் பயணிகள் ரெயில் வந்தது. அப்போது அமல் பி.குமார், சூர்யா நாயர் ஆகியோரின் உடல்கள் அகற்றப்படாததால் அந்த ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.

இதனால் அந்த ரெயிலில் இருந்தவர்கள் ரெயிலில் இருந்து இறங்கி 4 கி.மீ. தூரம் நடந்து கோவை ரெயில் நிலையம் வந்தனர். உடல்கள் அகற்றப்பட்ட பிறகு அந்த ரெயில் 2 மணி நேரம் தாமதமாக கோவை ரெயில் நிலையத்தை அடைந்தது. இதனால் அந்த ரெயிலில் வந்த பயணிகள் அவதிப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com