ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு

கறம்பக்குடி அருகே ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு
Published on

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பல்லவராயன்பத்தை ஊராட்சியை சேர்ந்த புதுப்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சிமன்ற அலுவலகம் அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு 3 வயது முதல் 5 வயது வரை உள்ள சுமார் 20 குழந்தைகள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு அடிப்படை கல்வி கற்பிக்கப்படுவதோடு ஊட்டச்சத்து உணவும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி சிமெண்டு கூரையுடன் போடப்பட்ட கட்டிடத்திலேயே செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதோடு, குழந்தைகள் மையத்திற்குள் சென்று வருவதற்கான சாய்தளமும் இடிந்து காணப்படுகிறது.

இதனால் அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகள் உள்ளே செல்ல பெரும் சிரமப்படுகின்றனர். மேலும் குழந்தைகள் ஓடி ஆடி விளையாடினால் மோசமாக உள்ள தரைத்தளத்தில் கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழல் உள்ளது. இதனால் குழந்தைகளை மையத்திற்கு அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். தற்போது சில குழந்தைகள் மட்டுமே அங்கன்வாடி மையத்திற்கு வருகின்றனர். கட்டிடத்தை சீரமைக்கா விட்டாலோ அல்லது மாற்று ஏற்பாடு செய்யாவிட்டாலோ எங்கள் குழந்தைகளை அனுப்ப மாட்டோம் என அப்பகுதி பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். எனவே குழந்தைகளின் நலன் கருதி, ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டவும், அதுவரை குழந்தைகள் பாதுகாப்பாக வந்து செல்ல மாற்று ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com