நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் ‘எந்த சின்னத்தை ஒதுக்கினாலும் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி’ - தங்கதமிழ்செல்வன் சொல்கிறார்

‘நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் எந்த சின்னத்தை ஒதுக்கினாலும் நாங்கள் உறுதியாக வெற்றி பெறுவோம்‘ என்று தங்கதமிழ்செல்வன் கூறினார்.
நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் ‘எந்த சின்னத்தை ஒதுக்கினாலும் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி’ - தங்கதமிழ்செல்வன் சொல்கிறார்
Published on

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.அணைக்கரைப்பட்டி கிராமத்தில் நடந்த கோவில் கும்பாபிஷேக விழாவில், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவம் மிகவும் கொடூரமான செயல் ஆகும். இதில் யார் குற்றவாளியாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். பெண்களை துன்புறுத்தியவர்களை ரோட்டில் விட்டு அடிக்க வேண்டும். முதல்-அமைச்சர் வசம் உள்ள போலீஸ் துறை மூலம் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். இந்த சம்பவத்தை யாரும் அரசியலாக்கவில்லை.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் விரும்புகின்றனர். வீடியோ ஆதாரங்களை வைத்து அமைச்சர் மகனுக்கோ, துணை சபாநாயகர் மகனுக்கோ தொடர்பு இருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். நடைபெற உள்ள தேர்தலில் எம்.பி. பதவிக்கு போட்டியிடுவதா? அல்லது எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிடுவதா? என்பதை கட்சி தலைமையிடம் பேசி முடிவு செய்வேன்.

எங்களுக்கு சின்னத்தை கூட கொடுக்க விடாமல் சதி செய்து வருகின்றனர். குக்கர் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கி கோர்ட்டு உத்தரவிட்டது. அதனை தடுக்கும் வகையில் மேல்முறையீடு செய்து உள்ளனர். எங்களுக்கு எந்த சின்னம் வேண்டுமானாலும் கொடுங்கள். அதனை மக்களிடம் கொண்டு சென்று நாங்கள் உறுதியாக வெற்றி பெறுவோம்.

தொகுதிக்கு ஒரு சின்னம் கொடுத்தாலும் அனைத்திலும் வெற்றி பெறப்போவது அ.ம.மு.க. தான். 18 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்ற பிறகு தமிழக அரசை வீட்டுக்கு அனுப்புவோம். ஆட்சி அதிகாரம் அனைத்தும் உங்களிடம் உள்ளது. தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மக்கள்தான் முடிவெடுப்பார்கள். நாங்கள் மக்களை சந்தித்து வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com