

நாகர்கோவில்,
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் விஜயகுமார் என்ற விஜய்வசந்த் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். சமுதாய தலைவர்கள், ஊர் தலைவர்கள், மீனவ பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களை நேரில் சந்தித்து தனக்கு கை சின்னத்தில் ஆதரவு தருமாறு கோரி வருகிறார். மேலும் கடைக்காரர்கள், வியாபாரிகள், மாணவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்து வருகின்றார். இந்த நிலையில் விஜய்வசந்த் நேற்று நாகர்கோவில் சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் சுரேஷ்ராஜனுடன் சேர்ந்து பிரசாரம் செய்தார்.
நாகர்கோவில் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ராஜாக்கங்மங்கலம் தெற்கு ஒன்றியத்தில் இருந்து இந்த பிரசாரம் தொடங்கியது. பின்னர் பெரும்செல்வவிளை, மேலசங்கரன் குழி, கணபதிபுரம், குருசடி, கோணம், அனந்தன்பாலம், பெருவிளை, பார்வதிபுரம், நேசமணிநகர், மேல சங்கரன்குழி, புன்னைநகர், சற்குணவீதி, செட்டிகுளம், மங்களா தெரு, கிறிஸ்துநகர், காமராஜர்புரம், புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தனக்கு கை சின்னத்திலும், சுரேஷ்ராஜனுக்கு உதயசூரியன் சின்னத்திலும் வாக்களிக்கும்படி மக்களிடம் கேட்டுக்கொண்டார். பிரசாரத்துக்கு சென்ற இடங்களில் எல்லாம் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக அவர் ராஜாக்கமங்கலத்தில் பேசும் போது கூறியதாவது:-
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
வருகிற சட்டசபை தேர்தல் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றக்கூடிய தேர்தல் ஆகும். என் தந்தை வசந்தகுமார் குமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார். எனவே அவர் விட்டு சென்ற பணிகளை திறம்பட செய்ய எனக்கு வாய்ப்பு தாருங்கள். மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையும் பாதிப்புக்குள்ளாக்கியது.
எனவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தற்போது பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சரானதும் பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்கப்படும். அதுமட்டும் அல்லாது குடும்பதலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தேர்தல் அறிக்கையில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார். எனவே தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்க வாக்களிக்க வேண்டும்.
குமரி மாவட்டத்தில் 6 சட்டசபைகளுக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடக்கிறது. நடைபெற உள்ள சட்டசபை மற்றும் நாடாளுமன்ற இடைத்தேர்தல் மிகவும் முக்கியமானது ஆகும். தமிழகத்தில் அடிமை ஆட்சியில் இருந்து மீட்டெடுக்கும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும். புதிய எழுச்சியை தரும் தேர்தலாக இருக்கும். எனவே மதசார்பற்ற கூட்டணிக்கு வாக்குகளை அளித்து மாபெரும் வெற்றி பெறச்செய்ய வேண்டும். குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்களை கொண்டுவர கை மற்றும் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள்.
விளவங்கோடு சட்டசபை தொகுதி இயற்கை வளம் நிறைந்த தொகுதியாக உள்ளது. இங்கு ரப்பர் தொழிற்சாலை அமைக்கவும், ரப்பர் பூங்காக்கள் ஏற்படுத்தவும், தொழில் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். நெய்யாறு இடதுகரை கால்வாயில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் கேரள அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை. இதன் காரணமாக 12-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் எனக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள் என்றால் என்னுடைய முதல் குரலாக நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை வைத்து அதை நிறைவேற்ற பாடுபடுவேன். எனவே வாக்காளர்கள் என்ன ஆதரித்து மாபெரும் வெற்றி பெற செய்ய வேண்டும்.
தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி தேர்தல் நடக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்துக்கு எந்த மக்கள் நலத்திட்டங்களும் வரவில்லை. பா.ஜனதாவின் மக்கள் விரோத சட்டங்களுக்கு அ.தி.மு.க. துணை போனதோடு நம்முடைய வாழ்வாதாரங்களையும் கெடுத்து கொண்டு இருக்கிறார்கள். வளர்ச்சிகள் எல்லாவற்றையும் தடுத்து நிறுத்தி உள்ளனர். எனவே அதற்கு முடிவுகட்ட மாற்றம் தேவைப்படுகிறது. அதற்கு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்குகளை அளித்து மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.
தமிழகம் எழுச்சி பெற வேண்டும். குமரி மாவட்டமும், மக்களும் எழுச்சி அடைய வேண்டும். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் என் தந்தை வசந்தகுமாரை பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். அவரது குரல் மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலித்தது. குமரி மாவட்டத்துக்கும், மக்களுக்கும் வளர்ச்சியை கொண்டு வர பல திட்டங்களை என் தந்தை தீட்டினார். அதற்காக மத்திய மந்திரிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளை சந்தித்து புதிய புதிய திட்டங்களுக்கு வழி வகுத்தார். ஆனால் எதிர்பாராத விதமாக கொரோனா தாக்கி என் தந்தை உயிரிழந்தார். என் தந்தை விட்டு சென்ற பணியை தொடர்ந்து செய்ய எனக்கு வாய்ப்பு தாருங்கள். கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் எனக்கு கை சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.