பயணிகள் ரெயில் போக்குவரத்து 7-ந் தேதி தொடக்கம்: விழுப்புரம் ரெயில் நிலையத்தை தயார்படுத்தும் பணிகள் தீவிரம்

பயணிகள் ரெயில் போக்குவரத்து 7-ந் தேதி தொடங்குவதையொட்டி விழுப்புரம் ரெயில் நிலையத்தை தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பயணிகள் ரெயில் போக்குவரத்து 7-ந் தேதி தொடக்கம்: விழுப்புரம் ரெயில் நிலையத்தை தயார்படுத்தும் பணிகள் தீவிரம்
Published on

விழுப்புரம்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் பயணிகள் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

அனைத்து ரெயில்களையும் இயக்கினால் கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால் பொதுமக்களின் நலனை கருதியும், அவர்களின் வசதிக்காகவும் திருச்சி- செங்கல்பட்டு (வழி- விருத்தாசலம்), மதுரை- விழுப்புரம், கோவை- காட்பாடி, திருச்சி- செங்கல்பட்டு (வழி- மயிலாடுதுறை), அரக்கோணம்- கோவை, மயிலாடுதுறை- கோவை, திருச்சி- நாகர்கோவில் இடையே 7 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் கொரோனா தாக்கம் அதிகரித்ததன் விளைவாக மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டதை தொடர்ந்து சிறப்பு ரெயில்களின் சேவை ஜூன் 29-ந் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து தொடங்கப்படும் என்று அரசு அறிவித்ததோடு, அன்றைய தினமே பயணிகள் ரெயில் சேவையை தொடங்கவும் அனுமதியளித்துள்ளது.

அதன்படி 2 மாதங்களுக்கு பிறகு வருகிற 7-ந் தேதி முதல் மீண்டும் பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த 7 சிறப்பு ரெயில்களையே மீண்டும் இயக்கலாமா? அல்லது கூடுதல் வழித்தடங்களில் ரெயில்களை இயக்கலாமா? என்பது குறித்து தென்னக ரெயில்வே அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே ரெயில் நிலையங்களை சுத்தப்படுத்தி தயார்படுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் உள்ள 6 நடைமேடைகளையும் சுத்தப்படுத்தி கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுதவிர ரெயில்வே அதிகாரிகள் அறை மற்றும் பயணிகள் தங்குமிடம் மற்றும் பயணச்சீட்டு வழங்கும் மையத்தையும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்தது. பயணச்சீட்டு வழங்கும் இடத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற வசதியாகவும், அதேபோல் நடைமேடைகளில் பயணிகள் ரெயிலுக்காக காத்திருக்கவும் 1 மீட்டர் இடைவெளியில் அடையாள குறியீடுகள் வரையப்பட்டு வருகின்றன. மேலும் ஒவ்வொரு ரெயில் பெட்டிகளையும் நன்கு சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com