மருத்துவமனைக்கு சென்ற அரசு பஸ் வாய்க்காலில் இறங்கியது பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்

திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சென்ற அரசு பஸ் வாய்க்காலில் இறங்கியது. இதில் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
மருத்துவமனைக்கு சென்ற அரசு பஸ் வாய்க்காலில் இறங்கியது பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்
Published on

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் முதன்மை கல்வி அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம் ஆகியவை உள்ளன. இதனால் பொதுமக்கள், நோயாளிகளின் வசதிக்காக திருவாரூர் பஸ் நிலையம் முதல் மருத்துவகல்லூரி மருத்துவமனை வரை அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த பஸ் பல்வேறு காரணங்களால் மருத்துவகல்லூரி வளாகம் முன்பாக மண் சாலையில் நிறுத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை திருவாரூரில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதில் திருவாரூர் பஸ் நிலையத்தில் இருந்து மருத்துவகல்லூரி சென்ற பஸ் மண் சாலையில் நிறுத்துவதற்காக டிரைவர் திரும்பியபோது திடீரென பின்சக்கரம் சேற்றில் சிக்கி வாய்க்காலில் இறங்கியது.

ஆனால் பஸ் டிரைவர் சாமர்த்தியமாக பிரேக் பிடித்து நிறுத்தினார். இதனால் பஸ் கவிழாமலும், அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதாமலும் தப்பியது. இதற்குள் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறி அடித்து கொண்டு இறங்கினர். இதனால் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். பஸ் நிறுத்துவதற்கு உரிய வசதி இல்லாதது விபத்துக்கு காரணமாக அமைந்தது. எனவே பஸ் நிறுத்துவதற்கு உரிய இடவசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com