கம்பிவேலியை கடந்து ரப்பர் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை திரும்ப வர முடியாமல் தவிப்பு

கம்பி வேலியை கடந்து ரப்பர் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை, கம்பி வேலியை தாண்டி செல்ல முடியாத நிலையில் பரிதவிக்கிறது. இந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கம்பிவேலியை கடந்து ரப்பர் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை திரும்ப வர முடியாமல் தவிப்பு
Published on

பாலக்காடு,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மங்கலம் அணை பகுதியை அடுத்த ஓடம்தோட்டில் தனியாருக்கு சொந்தமான ரப்பர் தோட்டம் உள்ளது. இந்த பகுதியில் காட்டு பன்றிகளின் நடமாட்டம் இருந்து வந்தது. மேலும் விவசாய நிலங்களை வனவிலங்குகளும் சேதத்தை ஏற்படுத்தி வந்தன.

இதனை தொடர்ந்து காட்டு பன்றிகள் மற்றும் வனவிலங்குகளை பிடிக்க கம்பி வேலியை அந்த பகுதியில் உள்ள சிலர் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. நேற்று வழக்கம் போல் காலையில் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் அங்கு வேலைக்கு சென்றனர். அப்போது ரப்பர் தோட்டத்திற்குள் சிறுத்தை ஒன்று உலா வந்தது. இதனை பார்த்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தொழிலாளர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர், சிறுத்தையை கண்காணித்தனர். அப்போது, ரப்பர் தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை சிறுத்தை தாண்டி செல்ல முடியாமல் தவித்தது.

எப்படியோ கம்பி வேலியை கடந்து ரப்பர் தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை, மீண்டும் அந்த பகுதியை விட்டு வெளியேற முடியாமல் அங்கேயே உலா வந்ததை வனத்துறையினர் உன்னிப்பாக கவனித்தனர். மேலும் அந்த சிறுத்தையை எந்த வகையில் பிடிப்பது? என்று ஆலோசனை நடத்தினர். பின்னர், மருத்துவரின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க முடிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் அந்த பகுதியில் அச்சத்துடன் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com