ஜோலார்பேட்டை அருகே பட்டப்பகலில் துணிகரம்; ஆசிரியர் தம்பதி வீட்டில் ரூ.1½ லட்சம் கொள்ளை

ஜோலார்பேட்டை அருகே பட்டப்பகலில் ஆசிரியரின் தம்பதியின் வீட்டின் பூட்டை உடைத்து 1½ லட்சம் பணத்தை கொள்ளையடித்த டிப்-டாப் ஆசாமியை பிடிக்க முயன்றபோது, வீட்டுக்குள் ஒருவர் இருப்பதாகக்கூறி, ஆசிரியையை தள்ளிவிட்டு தப்பிசென்றார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்ற மர்ம நபரின் படம் கண்காணிப்பு கேமராவில்
பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்ற மர்ம நபரின் படம் கண்காணிப்பு கேமராவில்
Published on

ஆசிரியர் தம்பதி வீட்டில் கொள்ளை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஹயாத்நகர் பகுதியை சேர்ந்தவர் உதயசூரியன் (வயது55). திருப்பத்தூரை அடுத்த பேராம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லதா, திருப்பத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் இவர்கள் இருவரும் நேற்று காலை பள்ளிக்கு சென்றுவிட்டனர். வீட்டில் இருந்த இவர்களுடைய மகன் கோபிநாத் பிற்பகல் 3 மணி அளவில் வெளியே சென்று உள்ளார்.

இதனை நோட்டமிட்ட டிப்டாப் ஆசாமி, ஆசிரியரின் வீட்டில் நுழைந்து இரண்டாவது தளத்தில் உள்ள ஒரு அறையின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை தேடி உள்ளான். அங்கு எதுவும் இல்லாததால், கீழே இறங்கி அங்குள்ள அறையில் பீரோவில் வைத்திருந்த சீட்டு பணம் ரூ.1 லட்சத்தையும், அடுத்த அறையில் பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரத்தையும் கொள்ளையடித்துள்ளான்.

இந்த நேரத்தில் வெளியே சென்றிருந்த கோபி வீட்டிற்கு வந்துள்ளார். சிறிது நேரத்தில் அவருடைய தாயார் லதாவும் வந்துள்ளார். கோபி வீட்டுக்குள் நுழைந்ததும், அந்த டிப்-டாப் ஆசாமி வீட்டில் இருந்து வெளியே ஓடி உள்ளான். இதைபார்த்த கோபிநாத் திருடன், திருடன் என கூச்சலிட்டுள்ளார்.

தள்ளிவிட்டு தப்பிய நபர்

உஷாரான லதா, திருடனை பிடிக்க முயற்றுள்ளார். அப்போது அந்த மர்ம ஆசாமி உள்ளே ஒருவன் இருக்கிறான், அவனை பிடியுங்கள் என்று கூறியபடி, ஆசிரியை லதாவை தள்ளிவிட்டு விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார்சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளான். பின்னர் இருவரும் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது இரண்டு அறைகளிலும் இருந்த 5 பீரோக்கள் உடைக்கப்பட்டு, பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை மர்ம ஆசாமி கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டு கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு, ஆசிரியை தள்ளிவிட்டு விட்டு தப்பி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com