பட்டிவீரன்பட்டி பகுதியில், வறட்சியால் வெட்டி அழிக்கப்படும் தென்னை மரங்கள்

பட்டிவீரன்பட்டி பகுதியில் கடும் வறட்சியால் தென்னை மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டு வருகின்றன.
பட்டிவீரன்பட்டி பகுதியில், வறட்சியால் வெட்டி அழிக்கப்படும் தென்னை மரங்கள்
Published on

பட்டிவீரன்பட்டி,

பட்டிவீரன்பட்டி பகுதியில் அய்யம்பாளையம், மருதாநதி அணை அருகேயுள்ள உள்கோம்பை, வெளிகோம்பை, நெல்லூர், சிங்காரக்கோட்டை, சேவுகம்பட்டி, சித்தையன்கோட்டை, செங்கட்டான்பட்டி, சுந்தராஜபுரம், போடிகாமன்வாடி, சித்தரேவு, ஒட்டுப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் தென்னை விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இந்த பகுதியில் ஆயிரக்கணக் கான ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகின்றது.

இங்கிருந்து பல ஊர்களுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுதவிர தென்னை ஓலைகள், தேங்காய் உரித்த மட்டைகள் ஆகியவற்றில் இருந்து பல்வேறு வகையான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அவை தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதன் மூலம் வருவாயும், வேலை வாய்ப்பும் கிடைக்கிறது.

இதனால் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் தென்னை விவசாயம் முக்கிய வாழ்வாதாரமாக திகழ்கிறது. இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழை பெய்யவில்லை. இதன் காரணமாக தேங்காய் விளைச்சல் பெரிய அளவில் இல்லை. மேலும் பல பகுதிகளில் தென்னை மரங்கள் கருகி வருகின்றன.

எனினும், அய்யம்பாளையம், கோம்பை பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து சொட்டுநீர் பாசனம் மூலம் தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். ஆனால், மழை பெய்யாததால் வறட்சி காரணமாக தேங்காய் விளைச்சல் பாதியாக குறைந்து விட்டது. இதுதவிர தேங்காய் விலை வீழ்ச்சி போன்ற காரணங்களால் தென்னை தொழில் நலிவடைந்து வருகின்றது.

இதனால் வேறு வழியின்றி தென்னை மரங்களை வெட்டி அழிக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறு வெட்டப்படும் தென்னை மரங்கள் மின்சாரம் தயாரிக்கும் இடங்களுக்கும், கட்டுமான நிறுவனங்களில் பலகைகளாகவும், செங்கல் உற்பத்தி செய்யும் இடங்களுக்கும் விற்கப்படுகின்றன.

மேலும் மரத்தை வேரோடு பிடுங்கினால் தான் அந்த இடத்தில் மாற்று விவசாயம் செய்ய முடியும். ஆனால் வேரோடு மரத்தை எடுப்பதற்கு செலவு கூடுதலாக வரும் என்ற காரணத்தினால் மரத்தை மட்டும் வேரை விட்டுவிட்டு வெட்டுகின்றனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பலன் தந்த தென்னை மரங்கள் வெட்டி அழிக்கப்படுவது விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com