பழவேற்காடு கடற்கரையில் ஆளில்லா குட்டி விமானம் கரை ஒதுங்கியதால் பரபரப்பு

பழவேற்காடு கடற்கரையில் ஆளில்லா குட்டி விமானம் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பழவேற்காடு கடற்கரையில் ஆளில்லா குட்டி விமானம் கரை ஒதுங்கியதால் பரபரப்பு
Published on

மீஞ்சூர்,

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள பழவேற்காடு கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது, கோரைக்குப்பம் மீனவ கிராமம். கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த கிராமத்தில் உள்ள மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.

நேற்று காற்றுடன் பலத்த மழை பெய்ததாலும், கடல் சீற்றம் காரணமாகவும் கடலில் ராட்சத அலைகள் எழுந்தன. இதனால் மீனவர்கள், கடற்கரையில் நிறுத்தி இருந்த தங்கள் படகுகள், மீன்பிடி வலைகளை பாதுகாப்பான இடங்களில் கொண்டு சென்று நிறுத்தும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது கடற்கரையில் ஆளில்லா குட்டி விமானம் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதை மீனவர்கள் கண்டனர். அதனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். சுமார் 6 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்டிருந்த அந்த குட்டி விமானம் முற்றிலும் பிளாஸ்டிக் பொருட்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதன் முன்பகுதியில் அதனை இயக்குவதற்கான கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளது. ஆனால் அது சேதமடைந்து உள்ளது. எனவே அந்த ஆளில்லா குட்டி விமானம் வானில் பறந்தபோது, அதன் கருவி பழுதடைந்ததால் கடலில் விழுந்து, பின்னர் அலையில் அடித்து வரப்பட்டு கடற்கரையில் ஒதுங்கி இருக்கலாம் என தெரிகிறது.

இதுகுறித்து காட்டூர் போலீசாருக்கும், பொன்னேரி வருவாய் துறையினருக்கும் மீனவர்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் இந்த ஆளில்லா குட்டி விமானத்தை மீட்டு, அது எந்த நாட்டைச் சேர்ந்தது? எப்போது கடலில் விழுந்தது? எதற்காக குட்டி விமானத்தை பயன்படுத்தினர்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பழவேற்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com