சென்னையில் 5–ந்தேதி அமைதிப்பேரணி: ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி மதுரையில் ஆலோசனை

சென்னையில் 5–ந்தேதி நடைபெறும் அமைதிப்பேரணி குறித்து மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் மதுரையில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
சென்னையில் 5–ந்தேதி அமைதிப்பேரணி: ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி மதுரையில் ஆலோசனை
Published on

மதுரை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து சென்னையில் 5ந்தேதி அமைதிப் பேரணி நடத்தப்போவதாக மு.க.அழகிரி அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் மு.க.அழகிரி நேற்று காலையில் மதுரை சத்தியசாய் நகரில் உள்ள தனது வீட்டின் முன்பு ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் அவரது ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ்பாட்சா, முன்னாள் துணை மேயர் மன்னன் மற்றும் முபாரக் மந்திரி, உதயகுமார், கோபிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த ஆதரவாளர்களும் பங்கேற்றனர். சென்னையில் நடைபெறும் பேரணிக்கான ஏற்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதுதொடர்பாக மு.க.அழகிரி ஆதரவாளர்களிடம் கூறும்போது சென்னையில் 5ந்தேதி நடைபெறும் அமைதிப் பேரணிக்கு திரண்டு வரவேண்டும். இதில் பங்கேற்பவர்கள் கருப்பு சட்டை அணிந்து, கருணாநிதி உருவப்படத்துடன் கூடிய பதாகைகளை கையில் ஏந்தி வரவேண்டும். அமைதியான முறையில் பேரணி நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.

பின்பு அழகிரி நிருபர்களிடம் கூறும்போது, தொண்டர்களின் எழுச்சி நிறைவாக இருந்தது. இந்த எழுச்சியின் மூலம் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பேரணியில் கலந்து கொள்வார்கள் என்பதை நீங்களே தெரிந்துகொள்வீர்கள். இதுதவிர மற்ற விவரங்களை வரும் 5ந்தேதி உங்களிடம் தெரிவிக்கிறேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com