முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பு போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

சென்னையில் முககவசம் அணியாமல் நடமாடியவர்களை போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து அபராதம் விதித்தனர்.
முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பு போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 8-ம் கட்டமாக ஊரடங்கு வருகிற 30-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் முககவசம் அணியாமல் நடமாடுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று என்னதான் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், சிலர் அதன் முக்கியத்துவத்தை உணரவில்லை.

இதனால் அரசின் அறிவிப்புகள் விழலுக்கு இறைத்த நீராக மட்டுமே இருக்கிறது. பல இடங்களில் சமூக இடைவெளி காற்றில் பறக்க விடப்படும் அளவுக்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்து வருகிறது. இந்த நிலையை போக்க சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூ.500-ம், முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200-ம் அபராதம் விதிக்கப்படும் என்ற அவசர சட்டத்திருத்தத்தை தமிழக அரசு பிறப்பித்தது.

இதனைதொடர்ந்து தமிழகம் முழுவதும் நேற்று அபராத நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. சென்னையிலும் அதன் தாக்கம் எதிரொலித்தது. சென்னை நகரில் சாலைகளில் முககவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளை வழிமறித்து போலீசார் அபராதம் விதித்தனர். அதேபோல வாகனங்களில் சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக சென்றவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

மாநகராட்சி அதிகாரிகளும் நேற்று மண்டல வாரியாக ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கடைவீதிகளில் முககவசம் அணியாமல் சென்றவர்களை போலீசார் உதவியுடன் பிடித்து அபராதம் விதித்தனர். அதேபோல கடைகளில் கூட்டமாக நின்ற வாடிக்கையாளர் கூட்டத்தையும் கலைத்தனர். கடை உரிமையாளருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அந்தவகையில் போலீசார், போக்குவரத்து போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து அபராத நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கினர். அபராதத்துக்கு பயந்து பெரும்பாலானோர் முககவசம் அணிய தொடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com