கேரளாவில் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு: சேலம் மாநகராட்சி மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

கேரளாவில் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு உதவிடும் வகையில் சேலம் மாநகராட்சி மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு: சேலம் மாநகராட்சி மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
Published on

சேலம்,

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் இடுக்கி, வயநாடு, மலப்புரம், எர்ணாகுளம், கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டும், மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டும் சிலர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் கேரளாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி சேலம் மாநகராட்சி பணியாளர்கள் சார்பில் நேற்று கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டு கேரளாவிற்கு ரெயில் மூலம் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர்.

கடந்த போகி பண்டிகையின்போது போகி பக்கெட் சேலன்ஜ் இயக்கம் மூலம் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 7,500 துணிகள் (சேலை, பேன்ட், சுடிதார், சர்ட்), உணவு பொருட்களில் 20 ஆயிரம் பிஸ்கெட் பாக்கெட்டுகள், 1,000 குடிநீர் பாட்டில்கள், 350 பிரட் பாக்கெட்டுகள் உள்ளிட்டவை ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. கேரளாவில் சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளதால், ரெயில் மூலம் கண்ணூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்றும், இதுசம்பந்தமாக அந்த மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் கூறியதாவது:-

கேரளாவில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்து வருவதால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கண்ணூர் மாவட்டத்தில் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறிந்து அவர்களுக்கு சேலம் மாநகராட்சி பணியாளர்கள் சார்பில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு அனுப்பி வைத்துள்ளோம். சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் பயன்படுத்தும் வகையில் துணிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்கள் அனைத்தும் கண்ணூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி செயற்பொறியாளர்கள் ரவி, கலைவாணி, மாநகர் நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையாளர்கள் கோவிந்தன், ஜெயராஜ், உதவி செயற்பொறியாளர்கள் செந்தில்குமார், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com