ஏரியில் கலக்கும் பாதாள சாக்கடை கழிவுநீர் நோய் பரவும் அபாயம் இருப்பதால் மக்கள் அச்சம்

பெரம்பலூரில் உள்ள ஏரியில் கலக்கும் பாதாள சாக்கடை கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஏரியில் கலக்கும் பாதாள சாக்கடை கழிவுநீர் நோய் பரவும் அபாயம் இருப்பதால் மக்கள் அச்சம்
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் கடைவீதி அருகேயுள்ள பெரியதெற்கு தெருவை ஒட்டியபடி வெள்ளந்தாங்கியம்மன் ஏரி இருக்கிறது. மழை வெள்ள காலங்களில் பெரம்பலூரில் உள்ள ஏரிகள் நிரம்பியபோது உபரிநீரை சேமித்து வைக்கும் வகையில், இந்த ஏரியின் அமைப்பு உள்ளது. இந்த ஏரியில் சேமித்து வைக்கப்படும் நீரால் குடியிருப்பு பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறு மற்றும் அப்பகுதியிலுள்ள விவசாய கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க உதவிகரமாக உள்ளது. எனினும் இந்த ஏரி நீண்ட நாட்களாக தூர்வாரப்படாததால் சீமைக்கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு காடு போல் காட்சியளிக்கிறது.

இந்த நிலையில் அப்பகுதியில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியில்லாததால் ஏரியில் கலக்கிறது. இதைத்தவிர அங்குள்ள கழிப்பறை கழிவுநீரும் ஏரியில் கலப்பதால் ஒரு வித துர்நாற்றம் வீசுகிறது. தினமும் ஏரியில் கலக்கும் கழிவுநீரால், ஏரியின் நீராதாரம் கெட்டுப்போவதோடு கொசுக்கள் உற்பத்திக்கும் வழிவகுக்கிறது. இதனால் வெள்ளந்தாங்கியம்மன் ஏரி மூலம் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப் பிருப்பதால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் பன்றிகளும் கழிவுநீர் வாய்க்காலில் புரண்டு எழுவதால் அந்த வழியாக பொதுமக்கள் முகம் சுளித்தபடிதான் செல்ல வேண்டியிருக்கிறது. பெரம்பலூரின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக உள்ள வெள்ளந்தாங்கியம்மன் ஏரியில் கழிவுநீர் கலப்பது வருத்தம் அளிக்கிறது எனவும், அரசு அதிகாரிகளின் மெத்தனபோக்கே இதற்கு காரணம் எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் உடனடியாக பாதாள சாக்கடையை சரி செய்து பெரிய தெற்குதெரு பகுதியில் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். மேலும் கழிவுநீர் சீராக செல்ல பாதாள சாக்கடையில் அடைப்பை சரி செய்வது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com