

மும்பை,
இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் புதுவகையான கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இதையடுத்து மராட்டியத்தில் மும்பை உள்பட மாநகராட்சி பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று மும்பையில் கொரோனா முன்கள பணியாளர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
புதிய வகை கொரோனா தொற்று இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. அந்த தொற்று இங்கு வந்துவிட்டால் என்ன ஆகும்?. கொரோனா தொற்று அபாயம் இன்னும் உள்ளது என்பதை மக்கள் உணர வேண்டும் என்பதற்காக தான் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் சூழலை தீவிரமாக எடுத்து கொண்டு பகல் நேரத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை தவிர்க்க வைப்பார்கள் என நம்புகிறேன்.
கொரோனா தொற்று பரவிய தொடக்கத்தில் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானேன். ஆனால் வேறு வழியில்லை போராடி தான் ஆக வேண்டும். பயங்கரவாதி அஜ்மல் கசாப்பை ஊடக துறையினர் நேரடியாக படம்பிடித்து இருந்தனர். தற்போது அவர்கள் கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் தைரியமாக போராடி வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.