கோடைகாலம் தொடங்கும்முன்பே கொளுத்தும் வெயில் சாலைகளில் நடமாட முடியாமல் பொதுமக்கள் அவதி

கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் சாலைகளில் நடமாட முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கோடைகாலம் தொடங்கும்முன்பே கொளுத்தும் வெயில் சாலைகளில் நடமாட முடியாமல் பொதுமக்கள் அவதி
Published on

தஞ்சாவூர்,

கோடைகாலமான ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக காணப்படும். கடந்த ஆண்டு தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அதிகபட்சமாக 105 டிகிரி வரை வெயில் கொளுத்தியது.

இதனால் கோடை காலம் தொடங்கி விட்டாலே கோடையை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் படாத பாடுபடுவார்கள். இந்த ஆண்டு தற்போது கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இந்த வெயில் கொடுமையினால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வருவதற்கே தயங்குகின்றனர். வேறு வழியில்லாத நிலையில் குடையை பிடித்துக்கொண்டும், வாகனங்களில் செல்பவர்கள் துணியால் தங்கள் தலையை மூடியபடியும் வெளியில் சென்று வருகின்றனர்.

வெளியில்தான் இந்த நிலைமை என்றால், வீடுகளிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. பகல் நேரத்தில் வெயில் கொடுமை என்றால், இரவில் வெயிலின் தாக்கத்தினால் புழுக்கம் அதிகமாக இருந்தது. இரவு நேரங்களில் மின்விசிறியில் இருந்து வரும் காற்றும் அனல் காற்றாகவே வருகிறது. கோடை வெயில் தொடங்குவதற்கு முன்னதாகவே இப்படி என்றால், அக்னி நட்சத்திர காலத்தில் இன்னும் வெயிலின் கொடுமை எப்படி இருக்குமோ? என பொதுமக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். தஞ்சையில் நேற்று 99 டிகிரி வெயில் கொளுத்தியது.

திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் நேற்று வெயில் கொளுத்தியது. நேற்று அடித்த வெயிலால் சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் வழக்கத்தை விட சற்று குறைவாகவே காணப்பட்டது. நடந்து சென்றவர்களில் பெரும்பாலானோர் கடும் அவதிக்குள்ளாகினர். இப்போதே வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ள நிலையில், கோடை வெயில் காலத்தை எப்படி சமாளிக்க போகிறோமோ, என்று மக்கள் எண்ணத்தொடங்கி விட்டனர். மேலும் கோடை வெயிலை சமாளிக்க வருணபகவான் தான் கருணை காட்ட வேண்டும் என்றும் வேண்டி வருகின்றனர்.

வெயிலின் தாக்கத்தை சமாளிக்க இளநீர், தர்பூசணி, பதநீர் போன்றவற்றை மக்கள் அதிக அளவில் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இதனால் தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில் இளநீர், பதநீர், தர்பூசணி, கரும்பு ஜூஸ் விற்பனை கடந்த சில நாட்களாக அதிக அளவில் நடைபெற்று வருகிறது. குளிர்பானகடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com