30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக்கடை பணியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் - கு.பாலசுப்பிரமணியன் பேட்டி

30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக்கடை பணியாளர்கள் இன்று(திங்கட்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக கு.பாலசுப்பிரமணியன் கூறினார். தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கடலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக்கடை பணியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் - கு.பாலசுப்பிரமணியன் பேட்டி
Published on

கடலூர்,

தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர், 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி விட்டனர். இது தொடர்பாக எங்கள் சங்க நிர்வாகிகளுடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஆணையர், நிர்வாக இயக்குனர், கூட்டுறவுத்துறை பதிவாளர் ஆகியோர் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள்.

இதில் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு ஊதிய மாற்றம் செய்யும் வரை இடைக்கால நிவாரணம் வழங்குவது, மருத்துவப்படியை 300 ரூபாய் ஆக உயர்த்தி வழங்குவது, 4 ஆயிரம் பணியாளர்களை பணிவரன் முறைப்படுத்துவது உள்ளிட்ட 7 கோரிக்கைகளை மட்டும் ஏற்றுக்கொண்டு அரசுக்கு பரிந்துரைத்தனர். ஆனால் இதுவரை அரசு எந்த முடிவையும் இது பற்றி அறிவிக்கவில்லை.

ஆகவே கடந்த மாதம் கடலூரில் நடைபெற்ற நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் மாநில மாநாட்டில் அறிவிக்கப்பட்ட படி அக்டோபர் 15-ந்தேதி (அதாவது இன்று) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஒரு மாதத்துக்கு முன்பே அரசுக்கு நோட்டீசு வழங்கி விட்டோம். ஆனால் அரசு இதுவரை எங்கள் சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

எனவே திட்டமிட்டபடி இன்று (திங்கட்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் நியாய விலைக்கடை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். இன்றும்(திங்கட்கிழமை), நாளையும்(செவ்வாய்க்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும், 17-ந்தேதி (புதன்கிழமை) 15 மையங்களில் மறியல் போராட்டமும் நடைபெறும். இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் நியாயவிலைக்கடை பணியாளர்கள் ஈடுபடுவதால் நியாயவிலைக்கடைகள் மூடியிருக்கும். நியாயவிலைக்கடை பணியாளர்களை சாதாரணமாக அரசு நினைத்து விடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது சங்கத்தின் மாநில செயலாளர் ஜெயச்சந்திரராஜா, அரசு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் விவேகானந்தன், முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com