வவ்வால்களுக்காக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் மக்கள் பட்டுக்கோட்டை அருகே வினோத கிராமம்

பட்டுக்கோட்டை அருகே ஒரு கிராமத்தில் வவ்வால்களுக்காக பட்டாசு வெடிக்காமல் மக்கள் தீபாவளி கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
வவ்வால்களுக்காக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் மக்கள் பட்டுக்கோட்டை அருகே வினோத கிராமம்
Published on

அதிராம்பட்டினம்,

தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசும், புத்தாடையும் தான் பிரதானம். தீபாவளி பண்டிகை அன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். ஆனால் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பரக்கலக்கோட்டை என்ற கிராமத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதில்லை. இதற்கு காரணம் அந்த கிராமத்தில் உள்ள பழமையான ஆலமரத்தில் வசிக்கும் பழந்தின்னி வவ்வால்கள் தான்.

பட்டாசு வெடித்தால் வவ்வால்களுக்கு இடையூறு ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சத்தில் கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை பல ஆண்டுகளாக கொண்டாடி வருகிறார்கள்.

ஆலமரம்

இந்த பகுதியில் ஆலமரங்கள் அதிகளவில் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட ஆலமரத்தில் மட்டுமே வவ்வால்கள் வசித்து வருகின்றன. அந்த ஆலமரம் 100 ஆண்டுகளுக்கு மேலாக இருப்பதாக கிராம மக்கள் வியப்புடன் கூறுகிறார்கள். ஆயிரக்கணக்கான வவ்வால்கள் வசிக்கும் அந்த ஆலமரத்தை மக்கள் தெய்வமாக போற்றி வழிபடுகின்றனர்.

இந்த வவ்வால்களுக்கு சிறு தொந்தரவு கூட இப்பகுதி மக்கள் கொடுப்பதில்லை. இந்த வினோத கிராமத்தில் உள்ள ஆலமரத்தையும், அதில் வசிக்கும் வவ்வால்களையும் காண பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகிறார்கள். இந்த ஆலமரத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வவ்வால்கள் வசித்து வருவதை நினைவுகூரும் விதமாக ஒரு நினைவு கல்வெட்டு ஒன்றையும் இப்பகுதி மக்கள் அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com