மக்கள் ஊரடங்கு உத்தரவு ஒரு வாரத்திற்கு முன்பே அமல்படுத்தி இருக்க வேண்டும் - சஞ்சய் ராவத் கூறுகிறார்

மக்கள் ஊரடங்கு உத்தரவு ஒரு வாரத்திற்கு முன்பே அமல்படுத்தி இருக்க வேண்டும் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
மக்கள் ஊரடங்கு உத்தரவு ஒரு வாரத்திற்கு முன்பே அமல்படுத்தி இருக்க வேண்டும் - சஞ்சய் ராவத் கூறுகிறார்
Published on

மும்பை,

உலகை அச்சுறுத்தும் ஆட்கொல்லி வைரசான கொரோனா தற்போது இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் 300-க்கும் மேற்பட்டோர் இந்த நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மராட்டியத்தில் மட்டும் இந்த நோய்க்கு 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தநிலையில் பிரதமர் நரேந்திரமோடி கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நேற்று மக்கள் ஊரடங்கு அறிவித்து இருந்தார்.

இது குறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஊரடங்கு உத்தரவை ஒரு வாரத்திற்கு முன்பே அமல்படுத்தி இருக்க வேண்டும். அரசுக்கு வேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம், ஆனால் முன்னரே முழு அடைப்பு அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது தான் எனது தனிப்பட்ட கருத்து. மென்மையான போக்கை கடைப்பிடிக்க இது நேரமில்லை. சீனாவின் சர்வாதிகார ஆட்சியைப் போல செயல்பட வேண்டும். அங்கு அவர்கள் தங்கள் முடிவுகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தினர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மாட்டிறைச்சி வாங்குபவர்களை கொல்வது, பாரத் மாதா கி ஜெய்' போன்ற கோஷங்களை எழுப்புவதற்கு பதிலாக, ஒருவருக்கொருவர் உதவுவதன் மூலமும், மக்களை உயிருடன் வைத்திருப்பதன் மூலமும் இந்த நாட்டிற்கு சேவை செய்ய இது சரியான தருணமாகும்.

இந்த நோய் பாதிப்பு பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் தாக்கம் அடுத்த சில ஆண்டுகளுக்கு உணரப்படும். எனவே நாம் அரசுக்கு ஆதரவாக நிற்க வேண்டும்.

எதிர்க்கட்சிகள் சில அரசியலில் ஈடுபடலாம் மற்றும் அரசை குறை கூறலாம். அரசியல் செய்வதற்கு இது சரியான நேரம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com