வெள்ளம் பாதித்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 34 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைப்பு : பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் தகவல்

வெள்ளம் பாதித்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 34 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் கூறினார்.
வெள்ளம் பாதித்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 34 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைப்பு : பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் தகவல்
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த இடங்களில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், பள்ளிக்கல்வித்துறை செயலாளருமான டி.உதயசந்திரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பவானிசாகர் அணை மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் கரையோர பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக் கப்பட்டு வருகிறது. அதன்படி 34 முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் 605 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 3 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

பவானி நகராட்சி பகுதியில் மட்டும் 8 முகாம்கள் அமைக்கப்பட்டு 323 குடும்பங்களை சேர்ந்த 742 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் ஈரோடு மாநகராட்சி, சத்தியமங்கலம், கொடுமுடி, பவானிசாகர், மொடக்குறிச்சி, கோபிசெட்டிபாளையம் ஆகிய பகுதிகளிலும் பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக 300 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர் சேதமடைந்து உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. மேலும், வெள்ள பாதிப்பு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரு கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன், மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, உதவி கலெக்டர் (பயிற்சி) பத்மஜா உள்பட அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

முன்னதாக பவானி ஆற்றில் ஆகாயத்தாமரை அகற்றும் பணியையும், பவானியில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளையும், பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு இருந்த முகாமையும் அரசு செயலாளர் உதயசந்திரன், கலெக்டர் பிரபாகர் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும், காவிரி ஆறு, காலிங்கராயன் அணைக் கட்டு ஆகிய பகுதிகளையும் அவர் பார்வையிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com