

தஞ்சாவூர்,
தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் மாட்டுப்பொங்கல் பண்டிகையும், நேற்று காணும் பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக தஞ்சை பெரியகோவில், கல்லணை போன்ற இடங்களில் காணும் பொங்கல் விழா களைகட்டியது.
உலகபிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் காலைமுதலே வரத்தொடங்கினர். போக, போக கூட்டம் அதிகமாக இருந்ததால் சாமி தரிசனம் செய்ய வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் குடும்பம், குடும்பமாக வந்தவர்கள் கோவில் வளாகத்தில் உள்ள புல்தரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
வரிசையாக நின்ற வாகனங்கள்
சிலர், தாங்கள் கொண்டு வந்த உணவு பண்டங்களை புல்தரையில் அமர்ந்து சாப்பிட்டனர். கோவிலுக்கு வந்த அனைவரும் பலத்த சோதனைக்குப்பின்னரே அனுமதிக்கப்பட்டனர். வெளிமாவட்டங்களில் இருந்து பெரியகோவிலுக்கு கார், பஸ்கள், வேன்களில் ஏராளமானோர் வந்திருந்தனர். இந்த வாகனங்களை நிறுத்த பெரியகோவில் எதிரே இடவசதி இல்லை. இதனால் மேம்பாலம் அருகே உள்ள காலியிடத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதுடன், தஞ்சை நீதிமன்றசாலை, போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகம் ரோடு ஆகிய பகுதிகளிலும் வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன.
காணும் பொங்கலையொட்டி தஞ்சை அரண்மனை, கலைக்கூடம் ஆகிய இடங்களிலும் வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் அதிகஅளவில் இருந்தது. தஞ்சை சிவகங்கை பூங்கா ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பொலிவு பெறுவதற்காக மூடப்பட்டதால் வெளியூரில் இருந்து வந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். பூங்கா மூடப்பட்டது தெரியாமல் பலர் குடும்பத்துடன் வந்து விட்டு திரும்பி சென்றனர். சிவகங்கை பூங்கா மூடப்பட்டதால் தஞ்சை ராஜராஜன் மணிமண்டபத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
சிறுவர்கள் விளையாட்டு
மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சமைத்து எடுத்து வந்து மணிமண்டபத்தில் அமர்ந்து உணவருந்தினர். சிறுவர்கள், ராட்டினம், சறுக்கு விளையாட்டு, பலூன் சறுக்கு போன்றவற்றிலும் விளையாடி மகிழ்ந்தனர். கார்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய வசதி இல்லாத காரணத்தினால் வல்லம் நம்பர்-1 சாலையோரம் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
தஞ்சையை அடுத்த வண்ணாரப்பேட்டை அருகே புதுஆற்றுப்பாலத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பலர் ஜோடியுடன் வந்து இருந்தனர்.
காணும் பொங்கலையொட்டி பெரியகோவில், மணிமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் குவிந்துள்ள பொதுமக்களுக்கு எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெற்றுவிடக்கூடாது என்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போலீசார் ரோந்து சுற்றி வந்த வண்ணம் இருந்தனர்.