கொரோனா அச்சுறுத்தலையும் மீறி மகாளய அமாவாசையில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்

கொரோனா அச்சுறுத்தலையும் மீறி மகாளய அமாவாசையில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமான மக்கள் குவிந்தனர்.
கொரோனா அச்சுறுத்தலையும் மீறி மகாளய அமாவாசையில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்
Published on

நன்னிலம்,

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படும். இந்த அமாவாசையில் பித்ருக்கள் என கூறப்படும் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு வாய்ந்தது என்பதால் இந்த மகாளய அமாவாசையில் முன்னோருக்கு பெரும்பாலான மக்கள் குளக்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

இந்த ஆண்டு கொரோனா தடுப்பு விதிமுறைகள் காரணமாக முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு உகந்த புண்ணிய தலங்களில் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் பொதுமக்கள் கொரோனா அச்சுறுத்தலையும் மீறி தங்களுக்கு அருகில் உள்ள நீர்நிலைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரித்ராநதி தெப்ப குளக்கரையில் ஏராளமான பொதுமக்கள் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அங்கு நேற்று அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மதியத்துக்கு பிறகும் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர்.

வாஞ்சிநாதர் கோவில்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள திருவாஞ்சியம் கிராமத்தில் வாஞ்சிநாதர் கோவில் உள்ளது. பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் உள்ள தீர்த்தக்குளம் குப்த கங்கை என அழைக்கப்படுகிறது. இங்கு முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பது புண்ணியம் தரும் என மக்கள் நம்புகிறார்கள்.

பொதுவாக அமாவாசை நாட்களில் மட்டுமே முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் திருவாஞ்சியத்தில் மட்டும் அனைத்து நாட்களிலும் குப்த கங்கையில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கமாக உள்ளது.

சாலையோரம் அமர்ந்து...

நேற்று மகாளய அமாவாசை என்பதால் திருவாஞ்சியம் கோவிலில் தர்ப்பணம் கொடுப்பதற்காக பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் குவிந்தனர்.

ஆனால் கொரோனா தொற்று காரணமாக குப்த கங்கையில் புனிதநீராடி தர்ப்பணம் கொடுக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து கோவில் அருகே சாலையோரம் அமர்ந்து மக்கள் தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவில்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி 16 அடி உயர விஸ்வரூப வைராக்கிய ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார்.

இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்தபடி கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் சானிடைசர் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராதிகா, கோவிலின் தலைமை அர்ச்சகர் வெங்கடேசன் ஸ்ரீராம் உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com