வேலைவாய்ப்பின்மை, மதக்கலவரத்தால் மக்கள் பாதிப்பு; நாராயணசாமி வேதனை

வேலைவாய்ப்பின்மை, மதக்கலவரத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வேதனை தெரிவித்தார்.
வேலைவாய்ப்பின்மை, மதக்கலவரத்தால் மக்கள் பாதிப்பு; நாராயணசாமி வேதனை
Published on

புதுச்சேரி,

புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராஜீவ்காந்தியின் 75-வது பிறந்தநாள் விழா கம்பன் கலையரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். விழாவில் நலத்திட்ட உதவிகளை காங்கிரஸ் மேலிட பார்வையாளர்களான முகுல்வாஸ்னிக், சஞ்சய்தத் ஆகியோர் வழங்கினர்.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

கடந்த 1984-ம் ஆண்டு ராஜீவ்காந்தி புதுவைக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது மூடிக்கிடந்த ரோடியர் மில்லை திறக்க கோரிக்கை வைத்தோம். அதைத்தொடர்ந்து பிரதமர் ஆனவுடன் மில்லை திறக்க ரூ.20 கோடியை ராஜீவ்காந்தி கொடுத்தார். அவர் பிரதமராக இருந்த காலத்தில் சிறிய மாநிலம், பெரிய மாநிலம், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலம் என்று பாரபட்சம் காட்டியதில்லை.

தென் மாநிலங்கள் மீது பற்றும், பாசமும் கொண்டவராக திகழ்ந்தார். பதவியை நாம் தேடி செல்லக்கூடாது. நம் உழைப்பைக் கண்டு பதவி நம்மை தேடி வரவேண்டும். உழைப்பவர்களை அடையாளம் கண்டு ராஜீவ்காந்தி பதவியை தருவார். எனக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கொடுத்து அழகுபார்த்தார்.

தற்போது நாட்டை ஆளும் பாரதீய ஜனதா இந்தியாவை இந்துக்கள் ராஜ்ஜியமாக மாற்ற நினைக்கிறது. காஷ்மீரில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைவர்கள் சிறையில் உள்ளனர். அழகான, அமைதியான மாநிலமாக இருந்த காஷ்மீரில் இன்று மக்கள் அமைதியாக வாழ முடியாத நிலை உருவாகி உள்ளது. மத்திய அரசு ஜம்மு-காஷ்மீரின் நிர்வாகத்தை முழுமையாக கையில் எடுத்துள்ளது.

புதுவை பட்ஜெட்டில் இலவச அரிசி வழங்க நிதி ஒதுக்கியுள்ளோம். மக்கள் அரிசி வழங்கும்படி கேட்கிறார்கள். ஆனால் கவர்னர் பணமாக கொடுங்கள் என்கிறார். மோட்டார் வாகன விற்பனை தற்போது 31 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் போகும். இதனால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பின்மை, மதக் கலவரம் ஆகியவற்றால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற பெயரில் மக்களை மத்திய அரசு பழிவாங்குகிறது.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

விழாவில் காங்கிரஸ் மேலிட பார்வையாளரான முகுல்வாஸ்னிக் பேசியதாவது:-

இந்தியா சுதந்திரம் பெற்ற பின் நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்ததில் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ், மன்மோகன்சிங் ஆகியோரின் பங்கு மிக அதிகம். இந்திராகாந்திக்கு பிறகு இந்தியாவின் இளம் பிரதமராக ராஜீவ்காந்தி பதவியேற்றார். அவர் தனது 5 ஆண்டுகால ஆட்சியில் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை தந்தார்.

கிராமங்கள்தோறும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான முன்னோடி திட்டத்தை ராஜீவ்காந்திதான் அறிவித்தார். தகவல் தொழில்நுட்ப புரட்சிக்கு வித்திட்டவரும் அவர்தான். செல்போன், கம்ப்யூட்டர் புரட்சி இப்போது ஏற்பட்டதற்கு ராஜீவ்காந்திதான் காரணம்.

அதிகாரம் பரவலாக்கப்பட பஞ்சாயத்துராஜ் சட்டத்தை அறிமுகம் செய்தார். ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

புதுவை அரசுக்குக்கூட டெல்லியில் இருந்து தொடர்ந்து தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு அந்த தொல்லைகளை எல்லாம் மீறி மக்களுக்கு சிறப்பான ஆட்சியை வழங்கி வருகிறது. மத்தியில் ஆட்சியை பிடிக்கும் வரை தொடர்ந்து போராடு வோம்.

இவ்வாறு முகுல்வாஸ்னிக் பேசினார்.

அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

இந்தியா வல்லரசாக வருவதற்கு மிகுந்த அக்கறை காட்டியவர் ராஜீவ்காந்தி. அனைத்து தரப்பு மக்களும் நிம்மதியாக வாழவேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் கொண்டு செயல்பட்டார். தீவிரவாதத்துக்கும், பயங்கரவாதத்துக்கும் சிம்ம சொப்பனமாக இருந்த அவரை சதி செய்து கொன்றனர்.

இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.

அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி நாட்டை வல்லரசாக்குவேன் என்று பொய் பிரசாரம் செய்து வருகிறார். 60 மாதம் ஆட்சியில் இருந்தபோது ஒன்றும் செய்யவில்லை. எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி ஆட்சியை மாற்றம் செய்வதாக கூறியுள்ளார். இலவச வேட்டி, சேலை தரவில்லை என்று கேட்டாரா? புதுவை பட்ஜெட்டுக்கு மத்திய அரசிடம் அனுமதி பெற்று தருவாரா?

குறுக்கு வழியில் வந்த பாரதீய ஜனதா கட்சியினருடன் சேர்ந்துகொண்டு ஆட்சிமாற்றம் என்று பேசி வருகிறார். அவரால் ஆட்சி மாற்றம் கொண்டுவர முடியாது. புதுவையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிதான் வரும். எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடியதால் பயம் இல்லை. அனைத்து அமைச்சர்களும் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க தயாராக உள்ளோம். காங்கிரஸ் கட்சியிலிருந்து எந்த ஒரு எம்.எல்.ஏ.வும் உங்களிடம் வரமாட்டார்கள்.

இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com