காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் - தர்மபுரி கலெக்டர் அறிவுறுத்தல்

கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என தர்மபுரி கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் - தர்மபுரி கலெக்டர் அறிவுறுத்தல்
Published on

தர்மபுரி,

காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தர்மபுரி கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரிகள் குளங்கள், குட்டைகள் மற்றும் ஆறுகளுக்கு நீர்வரத்தும் அதிகரிக்க துவங்கியுள்ளது. எனவே பொதுமக்கள் நீர்நிலைகளின் அருகில் தங்கள் குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைகள் நிரம்பிய நிலையில் உபரிநீர் திறந்து விடப்படுகிறது. இதனால் தர்மபுரி மாவட்டத்தின் வழியாக ஓடும் காவிரி ஆற்றில் நீரின் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் உடமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ள சூழலில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆற்றில் இறங்குவதும், அருவிகளில் குளிப்பதும், பரிசல் பயணம் செல்வதும் உயிருக்கு ஆபத்தினை விளைவிக்கும் செயல்களாகும். எனவே இந்த செயல்களில் ஈடுபட வேண்டாம். பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு உரிய ஒத்துழைப்பினை அனைத்து தரப்பினரும் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com