தி.மு.க.வெளிநடப்பு செய்வதை தவிர்த்து மக்கள் பிரச்சினையை விவாதிக்க வேண்டும்

சட்டசபையில் இருந்து தி.மு.க. வெளிநடப்பு செய்வதை தவிர்த்து மக்கள் பிரச்சினையை விவாதிக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
தி.மு.க.வெளிநடப்பு செய்வதை தவிர்த்து மக்கள் பிரச்சினையை விவாதிக்க வேண்டும்
Published on

புதுக்கோட்டை,

தமிழகத்தில் ஊழலற்ற, வெளிப்படையான, வளர்ச்சியான நிர்வாகம் தேவை என நினைக்கிறோம். இன்றைய கால கட்டத்தில் தமிழக அரசு அதனை கடை பிடிக்கிறதா? என்ற மிகப்பெரிய சந்தேகம் இருந்து வருகிறது. தமிழகத்தில் வறட்சி எல்லா இடங்களிலும் தாண்டவம் ஆடுகிறது. ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து நீர்நிலைகளை தூர்வாருவோம் என தமிழக அரசு கூறியதே தவிர நடந்ததா?, மேலும் சென்னையை சுற்றி உள்ள 4 ஏரிகள் தூர்வாரவில்லை. குடிநீர் தட்டுப்பாட்டினால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிவருகின்றனர்.

அது மட்டுமல்ல டாஸ்மாக் கடை வேண்டாம் என போராடும் பொதுமக்களுக்கு ஆதரவாக இல்லாமல், கடை வைப்பதற்கு தமிழக அரசு ஆதரவாக இருக்கிறது. மக்களின் மனநிலையை தமிழக அரசு முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 30 மணல் குவாரிகளை மூடிவிட்டு 70 மணல் குவாரிகளை திறந்து உள்ளனர். மணல் குவாரிகள் திறப்பதற்கு பல இடங்களில் கடும் எதிர்ப்பு தலை தூக்கி வருகிறது. மணல் விவகாரத்தில் அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால் லோடு ரூ.10 ஆயிரம் என்பது மட்டுமல்ல. ஆற்று மணலுடன் கடல் மண் கலப்படம் செய்து விற்பனை ஆகிறது. அரிசி, பால், மணல் போன்றவற்றில் கலப்படம் இருந்தால் கடும் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

மக்கள் பிரச்சினை

சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் சரிவர செயலாற்றவில்லை. தற்போது மக்கள் பிரச்சினையை விட ஆட்சி அதிகாரம் வேண்டும் என்ற அவசரத்தன்மை தான் அவரிடம் அதிகமாக தெரிகிறது. சட்டசபையில் இருந்து தி.மு.க. வெளிநடப்பு செய்வதை தவிர்த்து மக்கள் பிரச்சினையை விவாதிக்க வேண்டும். மற்ற பிரச்சினைகளை கோர்ட்டு பார்த்து கொள்ளும் என முடிவு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் மிகப்பெரிய சக்தியாக பா.ஜ.க மாறும். அதற்காக 12 ஆயிரத்து 500 முழுநேர ஊழியர்கள் கட்சி வளர்ச்சிக்காக வருகிற 23-ந் தேதி முதல் தமிழகத்தில் செயல்பட உள்ளனர். அ.தி.மு.க.வுக்கு மாற்று தி.மு.க. அல்ல பா.ஜ.க. தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com