முக்கிய நபர்களை கைது செய்யவில்லை: போதைப்பொருள் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உத்தரவு - சித்தராமையா வலியுறுத்தல்

போதைப்பொருள் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய நபர்களை கைது செய்யவில்லை: போதைப்பொருள் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உத்தரவு - சித்தராமையா வலியுறுத்தல்
Published on

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பிரதமர் மோடிக்கு இன்று (நேற்று) பிறந்த நாள். அதனால் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். இதையொட்டி மோடி சாதனை செய்துவிட்டதாக கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து விளம்பரம் கொடுத்துள்ளனர். மோடி பிரதமரான பிறகு நாட்டின் பொருளாதாரம் திவாலாகிவிட்டது. பண மதிப்பிழப்பு, மோசமான முறையில் அமல்படுத்தப்பட்ட சரக்கு-சேவை வரி திட்டம், தவறான நிதி நிர்வாகம் போன்றவற்றால் நாட்டின் பொருளாதார நிலை பாதாளத்திற்கு சென்றுவிட்டது. பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை. பொருளாதாரம் வளர்ந்தால் தான் வேலை வாய்ப்புகள் உருவாகும். விவசாயத்தை தவிர மற்ற அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்படவில்லை. புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது ஒருபுறம் இருந்தாலும், இருக்கும் வேலை வாய்ப்புகள் பறிபோய் கொண்டிருக்கின்றன. சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டுவிட்டன. வேலையில்லா திண்டாட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

ஆண்டுதோறும் 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக மோடி கூறினார். அது நடைபெறவில்லை. எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமல்படுத்தாததால் விவசாயிகள் கஷ்டத்தில் சிக்கியுள்ளனர். வேலை வாய்ப்புகள் இல்லாததால் வாழவே வேண்டாம் என்ற நிலைக்கு இளைஞர்கள் வந்துள்ளனர். மோடி பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கையில் அவரை இளைஞர்கள் ஆதரித்தனர். ஆனால் இப்போது அவர்கள் வேலை கிடைக்காமல் திண்டாடுகிறார்கள்.

அதனால் மோடியின் பிறந்த தினத்தை இளைஞர்கள் வேலையில்லா தினமாக அனுசரிப்பது தான் சரியானது. நாட்டில் கொரோனா பாதிப்பு 51 லட்சத்தை அடைந்துள்ளது. வைரஸ் பாதிப்பில் உலகிலேயே இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இது மத்திய பா.ஜனதா அரசின் மோசமான சாதனை ஆகும். போதைப்பொருள் விவகாரத்தில் முக்கிய நபர்களை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை. அரசின் அழுத்தம் இதற்கு காரணமாக இருக்கலாம். போதைப்பொருள் விவகாரம் குறித்து ஐகோர்ட்டு நீதிபதி மூலம் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

போலீசார் அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார்கள். அரசு என்ன சொல்கிறதோ அதன்படி போலீசார் நடந்து கொள்கிறார்கள். கர்நாடகத்தில் 2 முதல்-மந்திரிகள் இருக்கிறார்கள் ஒருவர் எடியூரப்பா. இன்னொருவர் அவரது மகன் விஜயேந்திரா. பெங்களூரு சிவானந்த சர்க்கிளில் இரும்பு மேம்பாலம் அமைக்கும் பணிகள் எனது ஆட்சியில் தொடங்கியது. அந்த பணிகளை இன்னும் முடிக்கவில்லை. கூடுதலாக ரூ.33 ஆயிரம் கோடி கடன் வாங்குவதாக அரசு கூறியுள்ளது.

இவ்வாறு செய்தால், கடன், வட்டியை செலுத்த மட்டுமே அரசிடம் பணம் இருக்கும். வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள நிதி இருக்காது. பெங்களூருவில் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு, அதன் வரைபடத்தை மாற்றுவதாக எடியூரப்பா கூறியுள்ளார். நிதி இல்லாதபோது எப்படி வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியும்?. எடியூரப்பா மக்களை சந்திப்பது இல்லை. பெங்களூருவிலேயே இருந்து காலத்தை கழிக்கிறார். இந்த பா.ஜனதா ஆட்சியில் பெங்களூரு வளர்ச்சி அடையாது. வெறும் பேச்சு மற்றும் ஊழலை மட்டுமே இந்த அரசிடம் இருந்து எதிர்பார்க்க முடியும். இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com