

திருச்சி,
திருச்சி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக கே.கே.நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூட்டமாக வந்திருந்தனர். மேலும் ஒரு பாக்கெட்டில் பூச்சிகளை பிடித்து கொண்டு வந்திருந்தனர். மனு குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கே.கே.நகரில் மத்திய அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்தின் தானிய கிடங்கு அமைந்துள்ளது. இதனை சுற்றி புவனேஸ்வரி நகர், அம்மன் நகர், ஐஸ்வர்யா நகர், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றோம்.
தானிய கிடங்கில் இருந்து விஷ வண்டுகள், பூச்சிகள் அதிக அளவில் வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன. விஷ வண்டுகள், பூச்சிகள் உணவு பொருட்களிலும், குடிநீரிலும் விழுந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காதில் விஷ வண்டுகள், பூச்சிகள் சென்றுவிடுவதால் அவர்கள் கடும் அவதி அடைகின்றனர்.
விஷ வண்டுகள் கடிப்பதாலும் உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. இந்த குடோனில் பல ஆண்டுகளாக உணவு பொருட்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததால் விஷ வண்டுகள், பூச்சிகள் அதிக அளவில் கிடங்கில் குவிந்து கிடக்கின்றன. இதனால் அருகிலும் அவை பரவி வருகிறது.
அரிசி மூட்டைகளை ஏற்றி செல்லும் லாரிகள் சாலையில் வேகமாக செல்வதால் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த தானிய கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற கோரி இந்திய உணவு கழக அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து தானிய கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இல்லையெனில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பாக்கெட்டில் பிடித்து கொண்டு வந்திருந்த பூச்சிகளுடன் கலெக்டர் ராஜாமணியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அவர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பூச்சிகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி ஆழ்வார்தோப்பு, காஜாதோப்பு, அண்டகொண்டான், காஜாகடை சந்து, பாலக்கரை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-
49-வது வார்டு, 19-வது வார்டு இடையே ரெயில்வே தண்டவாள பாதை உள்ளது. ரெயில்வே பாதையையொட்டி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பாதை வழியாக ஆம்புலன்ஸ் வேன், பள்ளி வாகனம், தீயணைப்பு வாகனம் சென்று வருகின்றன.
இந்த நிலையில் ரெயில்வே தண்டவாள பாதையையொட்டி 8 அடி உயரத்திற்கு இருபுறமும் சுற்றுச்சுவர் கட்ட ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சுற்றுச்சுவர் எழுப்பினால் இந்த பகுதி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே பொதுமக்களுக்கு பாதகம் இல்லாமல் சுற்றுச்சுவர் கட்டும் படி ரெயில்வே அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளோம்.
சுற்றுச்சுவர் கட்டினால் சமூகவிரோத செயல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அருகில் உள்ள பள்ளிவாசல்களுக்கு முஸ்லிம்கள் தொழுகை நடத்த செல்ல முடியாது. எனவே கலெக்டர் நேரடியாக எங்களது பகுதியை பார்வையிட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நடைபாதை மற்றும் வாகனங்கள் செல்ல வசதி ஏற்படுத்தி விட்டு சுற்றுச்சுவர் கட்ட ரெயில்வே நிர்வாகத்திற்கு அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
இதேபோல பொன்மலைப்பட்டியில் ஜெ.ஜெ.நகரில் சாக்கடையில் கழிவு நீர் தேங்கி உள்ளதாகவும் அதில், குப்பைகள் கொட்டப்பட்டும் கிடப்பதாகவும், அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் சுகாதார கேடு ஏற்படுவதாகவும், அதனை உடனடியாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனுவில் தெரிவித்திருந்தனர். இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுத்தனர். மனுவை பெற்ற கலெக்டர் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.