தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து

உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதால், உள்ளாட்சி தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனால் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறும் வகையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்கள், கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த மனுக்கள் பெட்டியில் மனுக்களை போட்டுவிட்டு சென்றனர்.

வீடுகளை பழுதுபார்க்க வேண்டும்

புதுக்கோட்டை அருகே உள்ள சத்தியமங்கலம் அரசினர் தெரு காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனுக்கள் பெட்டியில் போட்ட மனுவில், நாங்கள் குடியிருக்கும் காலனி வீடுகள் சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது இந்த வீடுகள் பழுதடைந்த நிலையில் உள்ளதால், கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக எங்கள் வீடுகளில் நீர் ஊற்று எடுக்கிறது. மேலும் மேற்கூரையில் இருந்து மழைநீர் வீட்டிற்குள் புகுந்து வருகிறது. இதனால் நாங்கள் கடும் அவதி அடைந்து வருகிறோம். எனவே எங்கள் பகுதியில் உள்ள காலனி வீடுகளை உடனடியாக பழுதுபார்த்து கொடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com