பெரம்பலூர், அரியலூரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

பெரம்பலூர், அரியலூரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
பெரம்பலூர், அரியலூரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
Published on

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சி கிராமத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா தலமான அடைக்கல மாதா ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஏசு பிறக்கும் மாட்டுக்கொட்டகையை குடிலாக மக்களை கவரும் வண்ணம் அமைத்திருந்தனர். இரவு 12 மணி அளவில் ஆலயத்தின் பங்குதந்தை சுவக்கீன், உதவி பங்குத்தந்தை எடிசன் சின்னப்பன் மற்றும் திருத்தொண்டர் லூக்காஸ் ஆகியோர் ஒன்றிணைந்து சிறப்பு திருப்பலி நடத்தி ஏசு பிறப்பை கொண்டாடி மக்களுக்கு இனிப்புகள் வழங்கி ஆசி வழங்கினர். இதேபோல் புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள மங்கல மாதா திருத்தலத்திலும், குலமாணிக்கம் கிராமத்திலுள்ள புனித இஞ்ஞாசியார் ஆலயத்திலும் கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பெரம்பலூரில் உள்ள புனித பனிமயமாதா திருத்தலத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பிரார்த்தனை கூடம் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு 11.45 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் குடிலில் ஏசு கிறிஸ்து பிறப்பின் மேன்மைகளை கூறும் பாடல்கள் இசைக்கப்பட்டன. உலகில் சமத்துவம், சகோதரத்துவத்திற்காக ஏசு கிறிஸ்து ஆற்றிய நற்செயல்கள் குறித்து விளக்கப்பட்டது. பின்பு திருப்பலி நள்ளிரவு 1 மணி வரை தொடர்ந்து நடந்தது.

இதில் பெரம்பலூர் மறைவட்ட முதன்மை பங்கு குரு ராஜமாணிக்கம் தலைமை தாங்கி, கிறிஸ்துமஸ் குடிலை திறந்துவைத்து சிறப்பு திருப்பலியை நடத்தி வைத்தார்.

இதில் வாலிகண்டபுரம் பங்குதந்தை பீட்டர், பனிமாதா தேவாலய பங்கு உறுப்பினர்கள், கிறிஸ்தவ கன்னிகையர், கத்தோலிக்க சங்க நிர்வாகிகள், இளைஞர் மன்ற நிர்வாகிகள், நகர்ப்புற மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு பகல் திருப்பலி நிகழ்ச்சி நடந்தது.

பெரம்பலூரை அடுத்த குரும்பலூர் பாளையத்தில் உள்ள 159 ஆண்டு பழமையான புனித சூசையப்பர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டு நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதேபோல் பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயம், பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள டி.இ.எல்.சி. தூயயோவான் ஆலயம், அன்னமங்கலம், கவுல்பாளையம், எசனை, தொண்டமாந்துறை, பாத்திமாபுரம், நூத்தப்பூர், திருவாலந்துறை, வடக்கலூர், எறையூர்சர்க்கரைஆலை, திருமாந்துறை, செட்டிகுளம், பாடாலூர் ஆகிய பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

வேப்பந்தட்டையை அடுத்துள்ள திருவாலந்துறை கிறிஸ்து அரசர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. விழாவையொட்டி பங்கு தந்தை அல்போன்ஸ்ராஜ் தலைமையில் நேற்று முன்தினம் இரவு ஏசு பிறப்பு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

இதேபோல் அன்னமங்கலத்தில் உள்ள புனித தோமையார் ஆலயம், அபிஷேக நாதர் ஆலயம், சி.எஸ்.ஐ ஆலயம் ஆகியவற்றிலும் கிறிஸ்மஸ் விழாவையொட்டி சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com