பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் 5-வது நாளாக வேலை நிறுத்தம் பணிகள் பாதிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் 5-வது நாளாக காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொது மக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் 5-வது நாளாக வேலை நிறுத்தம் பணிகள் பாதிப்பு
Published on

பெரம்பலூர்,

கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு அலுவலகங்களில் கணினி, இணையதள வசதி போன்ற அடிப்படை வசதிகளை அரசு செய்து தர வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும். மாவட்ட அளவிலான பணிமாறுதல், கிராம நிர்வாக அதிகாரிகளின் பரிந்துரையை ஏற்று உட்பிரிவுகளில் பட்டா வழங்குதல் உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அதிகாரிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அதிகாரிகள் கடந்த 28-ந் தேதி முதல் பட்டா உள்ளிட்ட சான்றிதழ்களை இணையதள வாயிலாக கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை.

அதன் தொடர்ச்சியாக கடந்த 10-ந் தேதி முதல் கிராம நிர்வாக அதிகாரிகள் பணியை புறக்கணித்து காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். நேற்று 5-வது நாளாக பெரம்பலூர் தாலுகா அலுவலகம் முன்பு பெரம்பலூர் வட்டார கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்த போராட்டத்திற்காக வட்டார தலைவர் சுரேஷ் தலைமையில் காலையிலும், மாலையிலும் ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர். இதேபோல பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை, ஆலத்தூர், குன்னம் ஆகிய தாலுகா அலுவலகங்கள் முன்பு அந்தந்த வட்டார கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். கிராம நிர்வாக அதிகாரிகள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால், அவர்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சாதி, வருவாய், இருப்பிட சான்றிதழ்கள் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சான்றிதழ்கள் கிடைக்க பெறாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com