

சென்னை,
சென்னை பட்டாளம் பகுதியை சேர்ந்தவர் சூராஜ் (வயது 50). இவர், சவுகார்ப்பேட்டையில் நகைக்கடை வைத்துள்ளார். சென்னையில் இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் நேற்றுமுன்தினம் இரவு 9 மணிக்கு கடையை பூட்டிவிட்டு, தனது மொபட்டில் சூராஜ் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவர், ஒரு பையில் ரூ.7 லட்சம் மற்றும் 35 பவுன் நகையை எடுத்துச்சென்றதாக தெரிகிறது. சூராஜ், பெரியமேடு போலீஸ்நிலையம் அருகே உள்ள கண்ணப்பர் திடல் அம்மா மாளிகை வழியாக வந்துகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், சூராஜை திடீரென்று வழிமறித்தனர்.
பின்னர் 2 பேரும் சேர்ந்து அவரை சராமரியாக தாக்கினர். மேலும் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த நகை, பணம் இருந்த பையை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து சூராஜ், பெரியமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சூராஜ், நகைக்கடையை பூட்டும்போது பணம்-நகையை எடுத்து வருவதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரை பின்தொடர்ந்து வந்து, ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் கண்ணப்பர் திடல் பகுதியில் வைத்து கைவரிசை காட்டியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
அதனடிப்படையில் சவுகார்ப்பேட்டையில் இருந்து சம்பவம் நடைபெற்ற பகுதிகள் வரையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். போலீஸ் நிலையம் அருகிலேயே நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.