9 மாதங்களுக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் உற்சாகம்

9 மாதங்களுக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் குளிக்க நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
9 மாதங்களுக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் உற்சாகம்
Published on

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் காலம் ஆகும். இந்த மாதங்களில் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. தமிழக அரசு அறிவித்த தளர்வுகளின்படி ஒவ்வொரு சுற்றுலா தளங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

அதன்படி குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று (நேற்று) முதல் அனுமதிக்கப்படுவார்கள் என்று தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன் நேற்று முன்தினம் அறிவித்தார். அதாவது, காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை சுற்றுலா பயணிகள் குளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

நேற்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவிகளில் குவிந்தனர். சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்களும் ஏராளமானவர்கள் வந்தனர். இதனால் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அனைவருக்கும் அருவிக்கரை நுழைவு பாதையில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் கைகழுவும் திரவம் வழங்கப்பட்டது.

சுற்றுலா பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் தரையில் தனித்தனியாக வட்டங்கள் போடப்பட்டு இருந்தன. இதையடுத்து சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஒரே சமயத்தில் 10 பேர் வரை அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

9 மாதங்களுக்கு பிறகு அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், அங்குள்ள வியாபாரிகள், விடுதி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். தற்போது சீசன் காலம் இல்லாவிட்டாலும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சுமாராக விழுந்தது. அதில் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

முன்னதாக, மெயின் அருவி கரை பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் அருவிக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி வீரபாண்டியன், சுகாதார அலுவலர் ராஜகணபதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com