பெருமாள் வெண்கல சிலை கண்டெடுப்பு; 100 ஆண்டுகள் பழமையானதா?

செய்யூரை அடுத்த வில்லிவாக்கத்தில் இரண்டரை அடி உயர வெண்கல பெருமாள் சிலை விவசாய நிலத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டது. இது பல 100 ஆண்டுகள் பழமையானதா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பெருமாள் வெண்கல சிலை கண்டெடுப்பு; 100 ஆண்டுகள் பழமையானதா?
Published on

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் சூனாம்பேடு அடுத்த வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 39). இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்வதற்கு தனது நிலத்திலுள்ள சீமைக்கருவேல மரங்களை ஜெ.சி.பி. எந்திரம் மூலம் அகற்றினார். அப்போது நிலத்தில் சுமார் இரண்டரை அடி உயரம் உள்ள 40 கிலோ எடை கொண்ட வெண்கல பெருமாள் சிலை புதைந்து கிடந்தது.

அதை பார்த்து அவர் ஆச்சரியம் அடைந்தார். பெருமாள் சிலை பூமிக்கடியில் கிடைத்த தகவல் அறிந்த சுற்றுவட்டார கிராம மக்கள் திரண்டுவந்து பார்த்தனர். அவர்கள் பெருமாள் சிலையை கழுவி, திலகம் வைத்து வணங்க தொடங்கினர். சிலை கிடைத்தது குறித்து வேல்முருகன் சூனாம்பேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் அந்த சிலையை மீட்டு, செய்யூர் தாசில்தார் லட்சுமி மற்றும் வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த சிலையை பாதுகாப்பாக கொண்டுசென்று கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

சூனாம்பேடு சுற்றுவட்டார பகுதிகளில் முந்தைய காலங்களில் ஜமீன்தார்கள் வாழ்ந்தார்கள் என்று கூறப்படுகிறது. எனவே சுற்றுவட்டார மக்கள் இந்த பெருமாள் சிலை பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஜமீன்தார்கள் காலத்து சிலையாக இருக்கலாம் என தெரிவித்தனர்.

அல்லது ஏதேனும் கோவில்களில் இருந்து யாரேனும் திருடி கொண்டுவந்து போட்டுச் சென்றார்களா? என்பதும் தெரியவில்லை. இதுகுறித்து வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com