

தஞ்சாவூர்,
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள முத்தமிழ்நகர் சிலப்பதிகார தெருவை சேர்ந்தவர் சண்முகநாதன். டாக்டரான இவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் நேற்று தனது மனைவி புவனேஸ்வரி மற்றும் மகள்கள் மற்றும் மருமகனுடன் வந்து கலெக்டர் கோவிந்தராவிடம் தனித்தனியே 7 புகார் மனு அளித்தார். அதில் சண்முகநாதன் கூறியிருப்பதாவது:-
என்னிடமும், எனது குடும்பத்தினரிடமும் பட்டுக்கோட்டையை சேர்ந்த ஒரு நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் அதிக வட்டி தருவதாகவும், அதில் வைப்பீடு செய்யும்படி வலியுறுத்தியதின் அடிப்படையில் நான் ரூ.25 லட்சத்து 39 ஆயிரத்து 124 டெபாசிட் செய்தேன். எனது மனைவி, மகள்கள், மருமகன்கள் பெயரில் ரூ.2 கோடியும் என மொத்தம் ரூ.2 கோடி டெபாசிட் செய்தேன்.
பணம் தர மறுப்பு
டெபாசிட் முதிர்வடைந்த நிலையில் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் நிதி நிறுவனம் ரூ.3 கோடி தர வேண்டும். ஆனால் முதிர்வு தொகை தராமல் ஏமாற்றி வருகிறார்கள். இது குறித்து கடந்த டிசம்பர் மாதம் 24-ந்தேதி கேட்ட போது தர முடியாது என கூறிவிட்டனர். என்னைப்போன்று இதே போல் பலரிடமும் அதிக வட்டி தருவதாக பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாக அறிந்தேன். இது குறித்து போலீசில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே எனக்கும், எனது குடும்பத்தினருக்குமான வைப்புத்தொகை மற்றும் வட்டியினை தராமல் ஏமாற்றி பணம் மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் பணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.