

ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்தனர். அதன்படி, ஊட்டி அருகே இடுஹட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி கலெக் டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
இடுஹட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடியிருப்பின் நடுவே அரசின் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்களில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டு விட்டன. இதனால் அருகே உள்ள கிராமங்களில் இருந்து மதுப்பிரியர்கள் திரளாக டாஸ்மாக் மதுக்கடைக்கு வருகின்றனர். அங்கு மதுபானங்கள் வாங்கி விட்டு, பஸ் நிலையம் சாலையில் அமர்ந்து மது அருந்துகின்றனர்.
அதன் காரணமாக தோட்ட வேலைக்கு சென்று வரும் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் மதுப்பிரியர்கள் போதையில் தகாத வார்த்தைகளை பேசுகின்றனர். இதனால் அந்த வழியாக செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்ட பா.ஜனதா விவசாய அணி துணைத்தலைவர் பிரகாஷ் மற்றும் அதன் நிர்வாகிகள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் மழை பெய்தது. மழை அளவுக்கு அதிகமாக பெய்ததால், சிறு, குறு விவசாயிகள் பயிரிட்ட பூண்டு, உருளைக் கிழங்கு, காலிப்பிளவர், கேரட், முட்டைக்கோஸ் போன்ற மலைக்காய்கறிகள் அழுகின. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளதுடன், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை நேரில் ஆய்வு செய்து, சிறு, குறு விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊட்டி நகராட்சியில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு உள்ள குப்பை தொட்டிகளில் இருந்து குப்பைகள் அகற்றப்படாததாலும், நிரம்பி கீழே விழுவதாலும் குப்பைகள் ஆங்காங்கே சிதறி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் ஊட்டி கோடப்பமந்து கால்வாயில் உணவுக்கழிவுகள், பிளாஸ்டிக்பொருட்கள் உள்ளிட்ட குப்பைகள் தேங்கி கிடப்பதால், கழிவுநீர் செல்ல வழியில்லை. இதனால் சாலை மற்றும் நடைபாதைகளில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.